41
தோழி கூற்று


வள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்

பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று
5இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள்,
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினிப் பணவை ஏறி,
10கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்,
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,
15குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா,
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று

தலைவி

இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
20சூள் பேணான் பொய்த்தான் மலை

தோழி

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
‘அஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று

தலைவி

25இள மழை ஆடும்; இள மழை ஆடும்;
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று

தோழி

வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்
30ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து
நீருள் குவளை வெந்தற்று

தலைவி

மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை

தோழி

35துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று

தந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்

என ஆங்கு
40நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே

இருவரும் இவ் வகையால் பாடிய வள்ளைப் பாட்டு, தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவு வேண்டிவிட, தந்தையும் வரைவு உடம்பட்டமை தோழி, தலைவிக்கு உரைத்தது