| கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல் |
| எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து, |
| அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ, |
| முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை, |
5 | வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, |
| புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி |
| திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! |
| தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை |
| என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, |
10 | நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, |
| கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை |
| சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு, |
| ‘ஓரும் நீ நிலையலை’ எனக் கூறல் தான் நாணி |
| நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை |
15 | ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, |
| மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி, |
| என ஆங்கு |
| இனையன தீமை நினைவனள் காத்தாங்கு, |
| அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள் |
20 | அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் |
| மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே |