| வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல் |
| விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா, |
| மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான், |
| புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல, |
5 | உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, |
| அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும் |
| பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப! |
| மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின், |
| இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன் |
10 | அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்; |
| கயல் உமிழ் நீர் போல, கண் பனி கலுழாக்கால்? |
| இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின், |
| ‘பனி இவள் படர்’ என பரவாமை ஒல்லும்மன் |
| ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி, நறு நுதல் |
15 | பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்? |
| ‘அஞ்சல்’ என்று அகன்று, நீ அருளாது துறத்தலின், |
| நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன் |
| நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர் |
| கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்? |
20 | என ஆங்கு, |
| விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை |
| முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை |
| தளி பெறத் தகைபெற்றாங்கு, நின் |
| அளி பெற நந்தும், இவள் ஆய் நுதற் கவினே |