55
தலைவி கூற்று

மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல்,
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு,
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,
இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய்,
5நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி:
‘நில்’ என நிறுத்தான்; நிறுத்தே வந்து,
நுதலும் முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ,
‘ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
10மை தீர்ந்தன்று, மதியும் அன்று;
வேய் அமன்றன்று, மலையும் அன்று;
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும், கிளியும் அன்று'
15என ஆங்கு,
அனையன பல பாராட்டி, பையென,
வலைவர் போல, சோர் பதன் ஒற்றி,
நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப்
புலையர் போல, புன்கண் நோக்கி,
20தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன்
தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!

‘பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி, ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்,அருமை சான்ற நால் இரண்டு வகையின், பெருமை சான்ற இயல்பின் கண்’ தலைவி கூறியது என்றது, ‘ஒருமைக் கேண்மையின் உறு குறை தான் அவள் என்னும் வேற்றுமை இல்லாத நட்பினாலே தோழி தனக்கு வந்து கூறிய குறையை; பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள் முன்னர்த் தெய்வப் புணர்ச்சி நிகழ்ந்தமை நோக்கி, அது காரணத்தான் முடிப்பதாகத் தெளிந்த தலைவி; அருமை சான்ற நால் இரண்டு வகையில் தான் முன் அருமை அமைந்து நின்ற நிலையால், தலைவன்தன்கண் நிகழ்த்திய மெய் தொட்டுப் பயிறல் முதலிய எட்டினாலே; பெருமை சான்ற இயல்பின்கண்ணும் தனக்கு உளதாம் பெருமை கூறுதற்கு அமைந்தது ஓர் இயல்பின் கண்ணும்: என்றவாறு. ’ இதனால் போந்த பொருள், ‘தலைவன் இத் துணை இளிவந்தன செய்யவும், யான் நாணும் மடனும் நீங்கிற்றிலேன்’ என்று தன் பெருமை தோழிக்குத் கூறுதலாயிற்று (19)