| வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், |
| மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி |
| ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, |
| கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் |
5 | தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, |
| வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் |
| இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி: |
| பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல், |
| தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண், |
10 | ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், |
| சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி! |
| பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள், |
| கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை, |
| பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த |
15 | கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? கனங்குழாய்! |
| வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின்மேல், |
| தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்! |
| மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் |
| கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை |
20 | என ஆங்கு, |
| இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி, |
| நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே |
| துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள், |
| மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே |