58
தலைவன் கூற்று

வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள்,
பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்!
5நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை,
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்:
உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம்
10வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
15அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
என ஆங்கு
20ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே

இதுவும் அது