65
தோழி கூற்று

திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ், நம்
5இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,
10பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி,
யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்
15வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி,
‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்
ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்’
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப
20முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது,
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண்,
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
25ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன்
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து

‘இரவுக் குறி அலராம்’ என்று அஞ்சி, தலைவனை நீக்கி நிறுத்தக் கருதிய தோழி,‘அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே, அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே’என்னும் சூத்திரத்தான், அல்லகுறிப்படுதல் தனக்கும் உரித்தாகலின், அவன் செய்த குறி அறிதற்குப் புறத்துச் சென்ற வழி, ஆண்டுப் பிறந்தது ஓர் செய்தியாக, ஒரு பொய்யை நாடக வழக்கும் உலகியல் வழக்கு்மாகப் புனைந்துரை வகையால் படைத்துக் கொண்டு, பிற்றை ஞான்று தலைவன் சிறைப் புறமாகத் தலைவிக்குக் கூறியது. இதனை, ‘இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி, நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும், வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும், நல் வகை உடைய நலத்தில் கூறியும், பல் வகையானும் படைக்கவும் பெறுமே’ எனப் பொருள் இயல் சூத்திரத்து,'பொய் தலைப்பெய்தலையும் படைக்கவும் பெறும்' என வழு அமைத்தவாற்றால் கொள்க.