| பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு |
| மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர் |
| செது மொழி சீத்த செவி செறு ஆக, |
| முது மொழி நீரா, புலன் நா உழவர் |
5 | புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! |
| 'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது, |
| ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி, |
| களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை |
| வளையின்வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ |
10 | 'கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின்' என, மற்று எம் |
| தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்? |
| 'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின் |
| மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ |
| முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள, |
15 | வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்? |
| சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன், |
| தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ |
| ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல், |
| 'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்? |
20 | என ஆங்கு |
| நனவினான் வேறாகும் வேளா முயக்கம் |
| மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, |
| 'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு, |
| கனவினான் எய்திய செல்வத்து அனையதே |
25 | ஐய எமக்கு நின் மார்பு |