7
தோழி கூற்று

‘வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ ஐய! சிறிது?
5 நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின்
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே
நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி,
10 புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே;
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே
நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய,
வலம் படு திகிரி வாய் நீவுதியே;
15 இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல்,
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
20 இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகற்கு, ‘நீர் பிரிகின்றீர் என்று யான் கூறத் தலைவி கேட்பின், அவட்கு அக் காலத்து நிகழ்வனவற்றை நும்மொடு ஆராய்வதுடையேன்;நீர் செய்யும் பொருள் இவள் உயிரையும் தருகிற்குமோ?’ எனச் செலவு அழுங்கக் கூறியது. ‘உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும், மடம் பட வந்த தோழி கண்ணும்’ என்பதனுள் செய்கை கூறுகின்றது (6)