70
தோழி கூற்று

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென,
கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி,
5துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி,
பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:
நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
10மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
15வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே
என ஆங்கு
20மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக்கால்!

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது