| 'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய |
| நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், |
| சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும் |
| ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, |
5 | ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி |
| உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, |
| அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் |
| தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் |
| உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் |
10 | புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், |
| வதுவை நாளால் வைகலும், அஃது யான் |
| நோவேன், தோழி! நோவாய், நீ' என |
| எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென: |
| 'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச் |
15 | சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, |
| விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த |
| விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும் |
| 'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என |
| ஊடியிருப்பேனாயின், நீடாது, |
20 | அச்சு ஆறாக உணரிய வருபவன் |
| பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல் |
| 'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான் |
| இகலியிருப்பேனாயின், தான் தன் |
| முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற |
25 | புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் |
| ஆங்க |
| விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், |
| அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும், |
| ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது, |
30 | அவ்அவ் இடத்தான் அவைஅவை காண |
| பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் |
| மாய மகிழ்நன் பரத்தைமை |
| நோவென், தோழி! கடன் நமக்கு எனவே |