83
தலைவி கூற்று


தலைவி தன் புதல்வனுடன் சென்ற தோழி நீட்டித்து வந்தமை பற்றி வினாவுதல்

பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை,

பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர,

இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்

விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய்,

5

உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம்

நீட்டித்த காரணம் என்?


தோழியின் மறுமொழி

கேட்டீ

பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்

குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும்

10

பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,

அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு

நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,

சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி

ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்

15

கால்கோள்' என்று ஊக்கி, கதுமென நோக்கி,

திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,

'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு

ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்

செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா

20

எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!

நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த

புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்' என்று இரங்குபு,

வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத

கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி,

25

ஒள்ளிழாய்! யான் தீது இலேன்


தலைவி தன் புதல்வனைக் கடிந்தும், அப்பொழுது அங்குவந்த தலைவனொடு புலந்தும் கூறுதல்

எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு

எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண்

அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,

முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை

30

வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு

தந்தையும் வந்து நிலை


விளையாட்டிக்கொண்டு வரற்குச் சேடியரோடு மகற் போக்கிய தலைவி, அவன் நீட்டித்துவந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளியவழி,'சிறைப்புறமாகக் கேட்டு வந்த தலைவனைக் கண்டு, அவள் தன்னுள்ளே புலந்தது