131

54. முல்லை

[வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.]

விருந்தின் மன்னர் அருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற்
காரும் ஆர்கலி தலையின்றி தேரும்
ஒவத் தன்ன கோபச் செந்நிலம்
5. வள்வாய் ஆழி உள்ளுறு புருளக்
கடவுக காண்குவம் பாக மதவுநடைத்
தாம்பசை குழவி வீங்குசரை மடியக்
கலையலங் குரல காற்பரி பயிற்றுப்
படுமணி மிடற்ற பயநிரை யாயம்
10. கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க
மனைமனைப் படரும் நனைநகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நணிணலைப்
15. 1புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென
20.  விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
திதலை யல்குலெங் காதலி
புதற்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

2-மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்.

(சொ - ள்.) 6. பாக - பாகனே!,

1-3. விருந்தின் மன்னர் - புதிய அரசர், அருங்கலம் தெறுப்ப - திறையாக அரிய அணிகலன்களைக் குவிப்ப, வேந்தனும் வெம் பகை தணிந்தனன் - நம் அரசனும் கொடிய பகைமை தணியப்பெற்றனன். தீம் பெயல் காரும் ஆர்கலி தலையின்று - மேகமும் இனிய பெயலை மிக்க ஒலியுடன் பெய்தது;


(பாடம்) 1. புன்கால் நெல்லி.

2. நொச்சி நியமங்கிழார் மகனார்...