339

149. பாலை

[தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது]

சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையில்
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
5. அத்தம் நீளிடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
10. பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
1அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது
15. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.

-2எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.

(சொ - ள்.) 7. என்நெஞ்சே - எனது நெஞ்சமே!

1-6. பெரும் கைஎண்கின் இரும் கிளை - பெரிய கையினை யுடையகரடியின் பெரிய கூட்டம், சிறு புன் சிதலை சேண்முயன்று எடுத்த - சிறிய புல்லிய கறையான் நெடிதுமுயன்று ஆக்கிய, நெடும் செம்புற்றத்து - உயர்ந்தசிவந்த புற்றில், ஒடுங்கு இரைமுனையில் - மறைந்துகிடந்த புற்றாம் பழஞ்சோற்றைத் தின்றுவெறுப்பின், புல் அரை இருப்பை - புற்கென்றஅரையினையுடைய இருப்பை மரத்தின், தொள்ளை வான்பூகவரும் - தொளை பொருந்திய வெள்ளிய பூவைக்கவர்ந்து உண்ணும், அத்தம் நீள் இடைப்போகி -சுரத்தின் நீண்ட வழியே சென்று, நன்றும் அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் -பெரிதும் அரிதாக ஈட்டும் சிறந்த பொருளைஎளிதாகப் பெறுவதாயினும்;


(பாடம்) 1.பெருஞ்சமம்.

2. ஏர்க்காட்டூர்.