(சொ - ள்.) நெஞ்சே!; 1-10. வலம் சரி மராஅத்து சுரம் கமழ் புதுவீ - வலமாகச் சுரித்த வெண்கடம்பினது சரமெல்லாம் கமழும் புதிய பூக்களை, சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி - சுருள் கொண்ட உளைபோன்ற மயிரினையுடைய தலையில் விளங்கும்படி அணிந்து, கறைஅடி மடப்பிடி கானத்து அலற-உரல்போன்ற அடியினையடைய இளைய பெண் யானை காட்டிற் (பிரிந்து) அலற, களிற்றக் கன்ற ஒழித்த உவகையர் - யானைக் கன்றினைப் பிரித்துக்கொண்ட மகிழ்ச்சியை யுடையராய், கலி சிறந்து - செருக்கு மிக்க, கருங்கால் மராஅத்துக் கொபங் கொம்பு பிளந்து - வலிய அடிமரத்தினையுடைய வெண் கடம்பின் வளவிய கொம்பினைப் பிளந்து, பெரும் பொளா வெண் நார்-பெரிதாக உரித்த வெள்ளிய நார்க் கயிற்றால், அழுந்துபடப் பூட்டி-அக் கன்றினை அழுத்தம் பெறக் கட்டிக் கொணர்ந்து, நெடுங்கொடி நுடங்கும் நியமம் மூதூர்-நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழைமையான ஊரில், நறவு நொடை நல்லில் புதவு முதல் பிணிக்கும் - கள்விற்கும் நல்ல இல்லின் வாயிலிடத்தே பிணித்திடும், கல்லா இளையர்-தம் வேட்டுவத் தொழிலன்றிப் பிறிது தொழில் கல்லாத வேடர்கட்கு, பெருமகன் - தலைவனான, புல்லி-புல்லி என்பானது, வியன்தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் - விரிந்த இடத்தினையுடைய நல்ல நாட்டின்கண்ணுள்ள வேங்கட மலையினைக் கடந்து செல்லினும்; 11-4. நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன நெய்தலினத முகை யவிழ்ந்த ஒளி பொருந்திய மலரை யொத்த, ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணன் - அழகினை ஏந்திய குளிர்ந்த கண்ணினளாய நம் காதலியின் குணங்கள், சேயர் என்னாது - சேய்மைக்கண் சென்ற வர் என்னாது, அன்புமிகக் கடைஇ - அன்பு மிகச் செலுத்திவிட, எய்த வந்தன தாம் - தாம் நம்மால் அணுக வந்தன. (முடிவு) நெஞ்சே! (நாம்) புல்லி வேங்கடம் கழியினும், எம் காதலி குணன் தாம் சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ எய்த வந்தன. (வி - ரை.) உளை - தலையாட்டம். ஒழித்த உவகையர்: ஒழித்த: பெயரெச்சம் காரணப் பொருட்டாக வந்தது. (மே - ள்.) 1'வெறியற சிறப்பின்’ என்னுஞ் சூத்திரத்து, தருதலும் என்ற மிகையால், நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற் படும் என்றரைத்து, ‘கறையடி மடப்பிடி கானத் தலறக், களிற்றக் கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து,.....கல்லா விளையர் பெருமகன் புல்லி’ என்ற அடிகளைக் காட்டி,......யானைக் கன்றைக் கவர்ந்தவாறு காண்க என்றனர், நச்.
1. தொல். புறத்: 5. |