71-80

71. பாலை
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
5
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
10
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
15
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார்

72. குறிஞ்சி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
5
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
10
''அஞ்சுவம் தமியம்'' என்னாது, மஞ்சு சுமந்து,
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
15
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
20
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.

தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார்

73. பாலை
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
5
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
''என் ஆகுவள்கொல், அளியள்தான்?'' என,
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
10
இருவேம் நம் படர் தீர வருவது
காணிய வம்மோ காதல்அம் தோழி!
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
15
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.

தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார்

74. முல்லை
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
5
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
10
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி'' என,
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
15
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!

தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்

75. பாலை
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
5
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
10
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
15
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?'' என-
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
20
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?''

''பொருள்வயிற் பிரிவர்'' என வேறுபட்ட தலைமகட்கு, ''பிரியார்''எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்

76. மருதம்
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
5
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
கழறுப என்ப, அவன் பெண்டிர்; ''அந்தில்,
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
10
ஆதிமந்தி பேதுற்று இனைய,
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல,
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.

''தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்'' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர்

77. பாலை
''நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று'' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
5
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
10
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
15
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.

தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார்

78. குறிஞ்சி
''நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
5
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
10
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?'' என,
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
15
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
20
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?

களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார்

79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
5
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
10
''வல்லாங்கு வருதும்'' என்னாது, அல்குவர
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
15
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

80. நெய்தல்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
5
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
10
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்