81-90

81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
5
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
10
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ
15
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?

பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

82. குறிஞ்சி
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15
பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?

தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர்

83. பாலை
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
5
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
10
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்

84. முல்லை
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
5
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
10
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
15
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறையேமே!

தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன்

85. பாலை
''நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்'' எனப் பல புலந்து,
5
ஆழல் வாழி, தோழி! ''சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
10
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்'' எனத் தேற்றிய
15
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.

தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

86. மருதம்
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
5
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
10
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
15
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
''பேர் இற்கிழத்தி ஆக'' எனத் தமர் தர,
20
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, ''யாழ நின்
25
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'' என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
30
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார்

87. பாலை
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
5
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
10
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால்
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
15
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்

88. குறிஞ்சி
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
5
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
10
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
கொடு விரல் உளியம் கெண்டும்
15
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார்

89. பாலை
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
5
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
10
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
15
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
20
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர்

90. நெய்தல்
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
5
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
''நீங்குக'' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
10
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
''உறும்'' எனக் கொள்குநர்அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்