311-320

311. பாலை
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
5
திறந்து நப் புணர்ந்து, ''நும்மின் சிறந்தோர்
இம்மை உலகத்து இல்'' எனப் பல் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
10
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்

312. குறிஞ்சி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து,
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
5
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
10
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார்
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை,
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல,
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!

தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார்

313. பாலை
''இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!'' என
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
5
ஐய ஆக வெய்ய உயிரா,
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து,
10
வருவர் வாழி, தோழி! பெரிய
நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
15
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
இல் வழிப் படூஉம் காக்கைக்
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

314. முல்லை
''நீலத்து அன்ன நீர் பொதி கருவின்,
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப,
5
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின்
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள,
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன்
10
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர்
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப,
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது'' என,
15
கடவுட் கற்பின் மடவோள் கூற,
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்!
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி!
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
20
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின்
இன் நகை இளையோள் கவவ,
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!

வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்

315. பாலை
''கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
பெண் துணை சான்றனள், இவள்'' எனப் பல் மாண்
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
5
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
அறியாமையின் செறியேன், யானே;
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
10
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
15
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.

மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்

316. மருதம்
''துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
5
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
10
பரத்தைமை தாங்கலோ இலென்'' என வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
அது புலந்து உறைதல் வல்லியோரே,
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
15
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார்

317. பாலை
'' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
5
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
10
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
15
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லைகொல்?'' என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
20
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
என்னுழியதுகொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல் நுதல் பாஅய பசலை நோயே?

தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்

318. குறிஞ்சி
கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
5
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
10
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
15
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!

இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர்

319. பாலை
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
5
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
10
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின்
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
15
''செல்வேம்'' என்னும் நும் எதிர்,
''ஒழிவேம்'' என்னும் ஒண்மையோ இலளே!

செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

320. நெய்தல்
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
5
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப!
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்,
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்,
10
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
வண்டற் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றை,
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?

பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்