331-340

331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
5
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
10
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
வேளிரொடு பொரீஇய, கழித்த
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
5
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
10
நின் புரை தக்க சாயலன் என, நீ
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
15
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர்

333. பாலை
''யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர,
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
5
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின்
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி,
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
10
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய,
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து,
நாள் இடைப்படாமை வருவர், நமர்'' என,
15
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா
நின் வாய் இன் மொழி நல் வாயாக
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
அவணர் காதலர்ஆயினும், இவண் நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
20
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி,
மறுதரல் உள்ளத்தர்எனினும்,
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார்

334. முல்லை
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
5
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து,
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
10
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
15
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார்

335. பாலை
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
யானும் அறிவென்மன்னே; யானை தன்
5
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
இன்னா வேனில் இன் துணை ஆர,
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
10
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
15
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
20
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
25
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்

336. மருதம்
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
5
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
10
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
15
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
என்னொடு திரியானாயின், வென் வேல்
20
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!

நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார்

337. பாலை
''சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
5
அவணது ஆக, பொருள்'' என்று, உமணர்
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
''உண்ணா மருங்குல் இன்னோன் கையது
10
பொன் ஆகுதலும் உண்டு'' என, கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
15
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
கள்ளி நீழல் கதறுபு வதிய,
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
எமியம் கழிதந்தோயே பனி இருள்
20
பெருங் கலி வானம் தலைஇய
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!

முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

338. குறிஞ்சி
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்,
5
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
10
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
15
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து,
20
வழங்கல் ஆனாப் பெருந் துறை
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்

339. பாலை
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
5
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
10
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே!

போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார்

340. நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
5
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
''செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
கழியே ஓதம் மல்கின்று; வழியே
10
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது'' என,
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண்
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
15
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
20
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன்,
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?

பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்