Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
341-350

341. பாலை
உய் தகை இன்றால் தோழி! பைபய,
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
10
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில்மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?

பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார்

342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
5
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
10
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையரமகளிரின் அரியள்,
அவ் வரி அல்குல் அணையாக்காலே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்

343. பாலை
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்,
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
5
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
10
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
15
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.

தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார்

344. முல்லை
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
5
கை மாண் தோணி கடுப்ப, பையென,
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
10
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

345. பாலை
''விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
தண் பதம் படுதல் செல்க!'' எனப் பல் மாண்
நாம் செல விழைந்தனமாக, ''ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
5
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
10
சில் நாள் கழிக!'' என்று முன் நாள்
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
15
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
20
கல் கண் சீக்கும் அத்தம்,
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!

தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

346.மருதம்
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
5
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
10
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
15
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
எம் மனை வாராயாகி, முன் நாள்,
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
இழை அணி யானைப் பழையன் மாறன்,
20
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
25
கோதை மார்பன் உவகையின் பெரிதே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர்

347. பாலை
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
5
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
10
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
15
கெடு மகப் பெண்டிரின் தேரும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்

348. குறிஞ்சி
என் ஆவதுகொல் தானே முன்றில்,
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
5
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
10
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,
''யானை வவ்வின தினை'' என, நோனாது,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

349. பாலை
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
5
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
10
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

350. நெய்தல்
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
5
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
10
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
15
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்