| சேரமான் குடக்கோநெடுஞ் சேரலாதன்:- இவன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியொடு போர்செய்து இறந்தான். அக்காலத்து அக்களத்தில் இவனைப் பாடிய புலவர்கள்; கழாத்தலையார், பரணர். சேரமான் கோக்கோதைமார்பன்:- இவன் சிறந்த கொடையாளி; இவன் நகரம் தொண்டியென்பது; இவனைப் பாடிய புலவர் பொய்கையார்; “கோதை மார்ப னுவகையிற் பெரிதே” (அகநா. 346) . இவன் நக்கீரனாராலும் பாராட்டப்பெற்றவன். சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன்:- இவன் சிறந்த கொடையாளி; மிக்க வீரமுடையவன். இவனைப் பாடிய புலவர் குண்டுகட்பாலியாதனார். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்:- இவன் புலவர்பால் மிக்க நேயமுடையோன். இவனைப் பாடிய புலவர் கபிலர். சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை:- இவன், தன் முரசுகட்டிலின்மேல் அறியாமல் ஏறித் துயின்ற மோசிகீரனாரைத் துன்பஞ் செய்யாமல் அவன் எழுமளவும் கவரிகொண்டு வீசியதனால் அவராற் புகழ்ந்து பாடப்பெற்றான். பதிற்றுப்பத்துள் எட்டாம்பத்திற்குத் தலைவன் இவனே. அதுபாடிய அரிசில்கிழார்க்கு ஒன்பதுநூறாயிரங் காணம் பரிசில் கொடுத்தான்; அதியமானுடைய தகடூரை வென்றான்; தகடூர் யாத்திரை யென்னும நூல் இவன் காலத்துச் செயயப்பட்டது போலும். சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி:- இவன் அரசர்களுக்கு இன்றியமையாத குணங்கள்பலவும் நிறைந்தவன்; சோழபரம்பரையிற் பிறந்தவன், ஒரு காலத்துச் சேரமானுடைய பாமுளூரை வென்று கைக்கொண்டான். இதனாலேயே இவனுக்கு இப்பெயர் வந்தது; இரப்போரைப் பாதுகாத்தலையே விரதமாக வுடையவன்; இவன் பெயர் சோழன்நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி யெனவும் வழங்கும். சேரமான் பாமுளூரென்பதற்குச் சேரமானுடைய பாமுளூரென்று பொருள்கொள்க. இவனைப் பாடிய புலவர் ஊன் பொதி பசுங்குடையார். சேரமான் பாலைபாடிய பெருங்கடுக்கோ:- இவன் கொடையும் வீரமும் உடையோன்; பாலைநிலத்தைப் பாடுதலில் ஆற்றல் மிக்கவனாக இருந்ததுபற்றி இவன் இப்பெயர் பெற்றான்; இவன்பெயர் பாலைபாடிய பெருங்கடுங்கோவெனவும் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் பேய் மகள் இளவெயினியென்பார். சேரமான்பெருஞ்சேரலாதன்:- இவன், சோழன் கரிகாற்பெரு வளத்தானோடு போர்செய்து புறப்புண்ணுற்று நாணி வடக்கிருந்தான். இவனைப் பாடியவர்கள்: கழாத்தலையார், வெண்ணிக் குயத்தியார். இவன் பெயர் சேரமான் பெருந்தோளாதனெனவும் வழங்கும்.
|