பக்கம் எண் :

659

“காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால், ஆர்கலி நறவின் வெண்ணி வாயிற், சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின், இழிமிசை முரசம் பொருகளத் தொழியப், பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய்வலி யறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே” (அகநா. 246) என்பதனால் தெரிகின்றது. இவன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரசாட்சி செய்தானென்பது, ஒரு காலத்தில் இமயமலைவரையிற் சென்று இடையிலுள்ள அரசர்களை வென்றானென்பதும், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், காஞ்சிப்புராணம் முதலியவற்றால் தெரிந்த வரலாறுகள். இவன் வீரருட் சிறந்த வீரன். இவன் பெயர் சோழன் கரிகால்வளவனெனவும், கரிகாலனெனவும், கரிகாலெனவும் வழங்கும்; அகநா. 125, 246. இவனைப் பாடியவர்கள்: கருங்குழலாதனார், வெண்ணிக் குயத்தியார். இவர்களுள் இவன் இறந்த பின்பும் இருந்தவர் கருங்குழலாதனார்.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன்:- இவன் ஒரு சேரனோடு பகைமைகொண்டு அவனது கருவூரை யழித்தான். இவனைப் பாடிய புலவர் கோவூர்கிழார்.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்;- இவன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியோடு நட்புடையவன். இவனைப் பாடிய புலவர்கள்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்:- இவனது இராசதானி உறையூர்; மிக்க கொடையும் வீரமும் உடையோன். செய்யுள் செய்தலில் வல்லவன்; கருவூரை முற்றுகைசெய்து சேரனை வென்றவன்.‘ இவனைப் பாடிய புலவர்கள்: ஆலத்தூர்கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர்கிழார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், வெள்ளைக்குடி நாகனார்; இவருள், இவன் இறந்த பின்பும் இருந்து பிரிவாற்றாது வருந்தியவர்கள்: மறோக்கத்து நப்பசலையார், ஐயூர்முடவனார், ஆடுதுறை மாசாத்தனார்.

சோழன் செங்கணான்:- இவன் சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு போர்செய்து அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைப்படுத்தினான். பொய்கையார் பாடிய ‘களவழிநாற்பது’ என்னும் நூலின் தலைவன் இவனை. இவன்காலத்துப் புலவர் பொய்கையார்; இப்புத்தகம் 635-ஆம் பக்கத்தின் அடிக்குறிப்பைப் பார்க்க.

சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி:- இவன் மிக்க வீரமும் கொடையுமுடையோன்; இவனைப் பாடிய புலவர்; ஊன்பொதி பசுங்குடையார்.