283
ஒண்செங் குரலித் தண்கயங் கலங்கி
வாளை நீர்நாய் நாளிரை பெறூஉப்
பௌவ வுறையள வா.......வி மயக்கி
மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரும்
5அழும்பிலனடாங்காறகையுமென்றும் (?)
வலம்புரி கோச ரவைக்களத் தானும்
மன்று ளென்பது கெட..........ானே பாங்கற்
கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க
உயிர்புறப் படாஅ வளவைத் தெறுவரத்
10தெற்றிப் பாவை திணிமண லயரும்
மென்றோண் மகளிர் நன்று புரப்ப
.................ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.

(பி - ம்.) 1 ‘குரவித்’ ‘களைநீர்காய,களையுளானே’ 2 - 3 ‘மாநீர நாய்நாளிரை பெறூஉமயௌவவவுறையளவா’ 4 - 5 ‘கதிர் பெயரு, மழிம்பிலனண்டரங்காற்கையும்’8 - 9 ‘திங்கணுயிறுர்ப்படாஅ’ 13 ‘கவிழ்’

திணை - தும்பை; துறை -பாண்பாட்டு. (பி - ம்.) பாடாண்பாட்டு

அடைநெடுங்கல்வியார் (பி - ம். அண்ட நெடுங்க...யார்.)


(கு - ரை.) 1. குரலி - ஒருவகைக்கொடி;“சிறுசெங் குரலி” (குறிஞ்சிப். 72; பெருங்.2. 12 : 29)

2. நாளிரை - காலையுணவு; வாளையை நீர்நாய்நாளிரையாகப் பெறும்; “அரிற்பவர்ப் பிரம்பின்வரிப்புற நீர்நாய், வாளை நாளிரை பெறூஉ மூரன்” (குறுந்.364 : 1 - 2); “வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்”,“நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய், வாளெயொ டுழப்ப”,“பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து,வாளை நாளிரை தேருமூர” (அகநா. 6 : 18, 336 : 4 - 5, 386 :1 - 2)

4. மாறு - பகை; “கடுமுரண் முதலை” (புறநா.37 : 10); ஊழ் - முறை.

5. அழும்பில் : இப்பெயருள்ள ஊர்சோழநாட்டிலொன்றும் சேர நாட்டிலொன்றும் உண்டென்றுதெரிகிறது; “பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி,அழும்பில்” (அகநா. 44 : 14 - 5); “மானவிறல்வேளழும்பில்”(மதுரைக். 344 - 5); “அறைபறை யென்றே யழும்பில்வேளுரைப்ப”(சிலப். 25 : 177)

6. வலம் புரி - வெற்றியைவிரும்பும்; கோசர் - ஒருவகை வீரர்; புறநா. 169 :9, குறிப்புரை. அவைக்களம் - பழையனென்னும் சிற்றரசனுடையமோகூரிலுள்ள அவைக்களம்; “பழையன் மோகூ ரவையகம்விளங்க, நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன” (மதுரைக்.508 - 9)

7. பாங்கற்கு - தோழன் பொருட்டு.

8. ஆர் - ஆரக்கால்; குறடு - வண்டியுருளையின்குடம்; வேல் நிறுத்து இங்க - வேற்படைகள் மார்பில்தங்க. வேற்படைகளால் தைப்புண்ட வீரனுக்கு ஆரக்கால்சூழ்ந்த குறடு உவமை; “நோன்குறட்டன்ன வூன்சாய்மார்பின்” (மதுரைக். 742); “வீரவே லுடம்பெலாஞ்சூழ வெம்புலால், சோருஞ்செங் குருதியுண் மைந்தர்தோன்றுவார், ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய,ஆரமே யமைந்ததேர்க் குழிசியாயினார்” (சீவக.790); “நெடுவேல் பாய்ந்த மார்பின், மடல்வன்போந்தையி னிற்கு மோர்க்கே” (புறநா. 297 : 9 -10) என்பன இங்கே கருதற்பாலன. இங்கல் - தங்கல்; “இரங்குவார்முரலும்”,“செம்பொனிங்குவார் கழலினாலும்”, “இங்குசுவையின்னமிர்தம்”(சீவக. 763, 1083, 2025)

8 - 9. புறநா. 290 - 4 - 5. வேல்தைத்தஆகத்திற்கு ஆர்சூழ் குறடு : பு. வெ. 176; தொல்.புறத். சூ. 71, .

10. தெற்றி - திண்ணை.

13. தும்பை - தும்பைமாலையை. அசைத்தல்- கட்டுதல்.

(283)