146
அன்ன வாகநின் னருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டே மடுபோர்ப் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல
நன்னாடு பாட வென்னை நயந்து
5பரிசி னல்குவை யாயிற் குரிசினீ
நல்கா மையி னைவரச் சாஅய்
அருந்துய ருழக்குநின் றிருந்திழை யரிவை
கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத
10தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே.

(பி - ம்.) 6 ‘நல்கா மையினீ வரச்’

திணையும் துறையும் அவை.

அவனை அவள் காரணமாக அரிசில்கிழார் பாடியது.

(இ - ள்.) அத்தன்மையவாக; நின்னால் தரப்பட்ட பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமுமாகிய அவைபெறுதலை விரும்பேம்; கொல்லும் போரையுடைய பேக! சிறிய யாழைச் செவ்வழியாகப்பண்ணி வாசித்து நினது வலிய நிலமாகிய நல்ல மலைநாட்டைப் பாட, என்னைக் காதலித்துப் பரிசில் தருகுவையாயின், தலைவனே! நீ அருளாமையாற் கண்டார் இரங்க மெலிந்து அரிய துயரத்தான் வருந்தும் உன்னுடைய திருந்திய அணியையுடைய அரிவையது தழைத்த மயிலினது பீலியைக் காலொன்றக் குவித்தாற்போன்ற தழைத்த மெல்லிய கூந்தற்கண்ணே மணங்கமழும் புகையைக் கொள்ளுவித்துக் குளிர்ந்த மணங்கமழும் மாலையைச் சூட வளவிய செலவையுடைய உயர்ந்த தேரை நின் குதிரைகள் பூண்பனவாக-எ - று.

அன்னவாகவென்றது, இரவலர்க்கு அருங்கலவெறுக்கைகளை எளிதிற் கொடுப்பையன்றே! அவ்வெறுக்கை எமக்கும் எளிதாகவென்றவாறாம்.


(கு - ரை.) 1. அருங்கல வெறுக்கை : புறநா. 378 : 11; அகநா.372 : 5; பெருங். 4. 3 : 141.

1-2. "அரும்பொருட் பரிசிலே னல்லேன்" (சிலப். 28 : 171)

3. புறநா.144 : 2, 147 : 2.

7. துயருழத்தல் : மணி.பதி. 48.

7-9. "கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்தல்" (நற். 265 : 8 - 9) ; "கலிமயிற் கலாவத் தன்னவிவ, ளொலிமென் கூந்தலுரியவாம்" (குறுந்.225) ; சிறுபாண். 14 - 5, குறிப்புரை.

9-10. புறநா. 147 : 6 - 8, 194 : 3; "பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தா, னறுமலர்க் கூந்த னாளணி பெறுகென" (சிலப்.27 : 215 - 6)

7-11. "மாணிழை யரிவை காணிய வொருநாட், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்" (பதிற்.81 : 31 - 2) (146)