285
பாசறை யீரே பாசறை யீரே
துடியன் கையது வேலே யடிபுணர்
வாங்கிரு மருப்பிற் றீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே காண்வரக்
5கடுந்தெற்று மூடையின்....
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள்....
10சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
மாறுசெறு நெடுவேன் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே
அதுகண்டு, பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந்
திறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
15அலமருங் கழனித் தண்ணடை யொழிய
இலம்பா டொக்கற் றலைவற்கோர்
கரம்பைச் சீறூர் நல்கின னெனவே.

(பி - ம்.) 8 ‘நடுநகா’ 2 ‘முரிவெண்டோல்’ 10 - 11. ‘செம்பறுக் கோஒ மாறுபடு நெடு’13 ‘பார்த்தோர்’ 16 ‘வலப்பாடு’ 17 ‘செறூர்,’ ‘களறூர்’

திணை - வாகை; துறை - ...................முல்லை.

அரிசில்கிழார்.


(கு - ரை.) 2. துடியன் - துடிப்பறைகொட்டுபவன்.

3. வளைந்த கரிய கோட்டையும் இனியநரப்புத் தொடையையுமுடைய சிறிய யாழ்.

4. தோல் - கேடகம்.

3 - 4. “தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப்பாண” (புறநா. 70 : 1)

5. கடுந்தெற்று மூடை - நெருங்கத்தெற்றின தானியக்கோட்டை; மூடை - குதிருமாம்; “கடுந்தெற்றுமூடையி னிடங்கெடக் கிடக்குஞ்சாலி” (பொருந.245 - 6)

6. மலைந்த - சூடிய.

7. அரசகாரியத்தைச் செய்யும் அரியதலைமையையுடைய சுற்றம்.

8. மொசிதல் - மொய்த்தல்; பதிற்.11 : 12, 46 : 8.

10. செம்மல் உக்கு ஓஒ.

11. பகைவரைக் கோபிக்கின்றநெடியவேல் மார்பினுட் போதலால்; “எஃகுளங் கழிய”(புறநா. 282 : 1)

14. குருசிலென்பது அவனென்னும் பொருளில்வந்தது.

13 - 4 புகழுக்கு நாணுதல் : புறநா.152 : 21 - 2, குறிப்புரை; கலித். 119 : 9.

15. தண்ணடை : மருதநிலத்தூர்; புறநா.287 : 10.

14 - 5. பிணங்குகதிர் அலமரும் கழனி- பின்னிய நெற்கதிர் சுழலும் வயல்; புறநா. 338 :10.

16. வறுமையையுடைய சுற்றத்தார்க்குத்தலைவனென்றது, ஓரிரவலனை. நல்கினனெனப் (17) பரந்தோரெல்லாம்புகழக் (13) குருசில் இறைஞ்சியோனென்க (14)

(285)