304
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயே நெருநை
5எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு
நாளைச் செய்குவெ னமரெனக் கூறிப்
புன்வயி றருத்தலுஞ் செல்லான் பன்மான்
கடவு மென்ப பெரிதே யதுகேட்டு
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
10இலங்கிரும் பாசறை நடுங்கின்
றிரண்டா காதவன் கூறிய தெனவே.

(பி - ம்.) 1 ‘சூடி’ 2 ‘நடுங்குமணிகளையார் நாரி பருகி’, ‘நடுங்கு மணி களையாநாளரிபருகி’, ‘பனிக்கசாஅய்’ 6 ‘நாடனைச்’ ‘செய்குவமமரெனக்’‘செய்குவனமரெனக்’ 7 ‘புன்மயிருகுத்தலுஞ் செய்யான்வன்மான்’, ‘புன்மையிற்’, ‘புன்மயிருருத்தலும்’‘பண்மாண்’ 9 ‘முரசில் வெல்’, ‘வேந்த ரிலங்கிரும்’

திணையும் துறையும் அவை.

அரிசில்கிழார்.


(கு - ரை.) 1. சூட்டி - சூட்ட.

2. குளிர்நீங்க வீரபானமாகிய மதுவைக்குடித்து; மதுவுக்கு வெம்மை செய்தல் இயல்பு; “வெப்புடையமட்டுண்டு”, “வெங்கட்டொலைச்சியும்”, ”இன்கடுங்கள்ளின்”, “வெங்கட்டேறல்” (புறநா. 24 :5, 29 : 15, 80 : 1, 170 : 12); “உண்ணமது”, “உக்கிரவூறல்”(பெருங். 1. 38 : 60, 2. 2: 180); பரி. 7 : 61 - 2.

3. காற்றைத் தொழிலொழியச் செய்கின்றவளவிய செலவையுடைய குதிரை; என்றது, அதனினும் விரையநடக்கும் குதிரையென்றபடி; “காலியற் புரவி”, “வளிநடந்தன்ன வாச்செல லிவுளி”, “வெவ்விசைப் புரவிவீசுவளி யாக” (புறநா. 178 : 2, 197 : 1, 369 : 7,); “காற்கடுப்பன்ன கடுஞ்செல லிவுளி”, “வான்வழங் கியற்கைவளிபூட் டினையோ, மானுரு வாக” (அகநா. 224 : 5, 384: 9 - 10); “காலியக் கன்ன கதழ்பரி” (மதுரைக்.440)

4. பண்ணற்கு - சமைத்தற்கு. விரைதி- விரைவாய்.

5. எம்முன் தப்பியோன் தம்பியொடு- எம் தமையனைக் கொன்றவனுடைய தம்பியுடன். ஒராங்கு- ஒருபடியாக; “நால்வேறு நனந்தலையோராங்கு நந்த”(பதிற். 69 : 16); கலித். 142 : 6.

6. நாளை யான் அமர்செய்து அவனைக்கொல்வேன்.

7. பன்மான் - ஆராய்ந்த குதிரை.

8. கடவும் - செலுத்தும். என்ப : அசை.

7 - 8. பகையை வென்றபின்பே உண்ணுங்கருத்தினனாதலால்இவ்வாறு கூறினார்; “காலை முரச மதிலியம்பக் கண்கனன்று,வேலை விறல் வெய்யோ னோக்குதலும் - மாலை, அடுகமடிசிலென் றம்மதிலு ளிட்டார், தொடுகழலார் மூழைதுடுப்பு” (பு. வெ. 117) என்பதையும், ‘அம் மதிலுள்இட்டார், இதனை அழித்து இன்றுபோய் உண்பேமென்று’என்னும் அதன் விசேடவுரையையும் பார்க்க.

9. வலம்படுமுரசு - வெற்றியுண்டாதற்குக்காரணமாகிய முரசு; ‘’வலம்படு வியன்பணை” (பதிற்.17 : 5) என்பதும், ‘போர்செய்து வருந்தாமற் பகைவர்வெருவியோட முழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலேபடநின்ற முரசம்’ என்னும் அதன் உரையும் ஈண்டு அறியற்பாலன.

11. கூறியது - சபதம்; வஞ்சினம்கூறுதல் ஒன்றுமொழிதலென்று கூறப்படுதலும், ‘’வைத்தவஞ்சினம் வாய்ப்ப வென்று” (பதிற். 9. பதி.)என்பதும் ‘இரண்டாகாதவன் கூறியது’ என்பது சபதமென்றுபொருள்படுதலை வலியுறுத்தும்.

9 - 11. அவன் கூறியது இரண்டாகாதென்றுஅரசனது பெரிய பாசறை நடுங்கியது.

(304)