319
பூவற் படுவிற் கூவற் றோண்டிய
செங்கட் சின்னீர் பெய்த சீறில்
முன்றி லிருந்த முதுவாய்ச் சாடி
யாங்கஃ டுண்டென வறிது மாசின்று
5படலை முன்றிற் சிறுதினை யுணங்கல்
புறவு மிதலு மறவு முண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதே யதனால்
முயல்சுட்ட வாயினுந் தருகுவேம் புகுதந்
தீங்கிருந் தீமோ முதுவாய்ப் பாண
10கொடுங்கோட் டாமா னடுங்குதலைக் குழவி
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்ன னெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
பாடினி மாலை யணிய
15வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே.

(பி - ம்.) 1 ‘றொடிய’ 4 ‘யாகஃடுண்டென’,‘யாறுஃடுண’, ‘மாகின்று’ 6 ‘புறவுமீதலு’, ‘மறவுமுணடெனப்’8 ‘புகுநரீங்கிரு’ 9 ‘தீங்கிருந்தீமே’, ‘இருந்தீரேமுது’

திணையும் துறையும் அவை.

ஆலங்குடி வங்கனார்.


(கு - ரை.) 1. பூவல் - செம்மண்; “தருமணற்றாழப்பெய் தில்பூவலூட்டி” (கலித். 114 : 12); “புனைமாணிஞ்சி பூவ லூட்டி” (அகநா. 195 : 3); “பூவலங்குன்றம்” (களவழி. 12). படு - மடு. தோண்டிய -தோண்டுதலால் உண்டாகிய; “களர்ப்படு கூவற்றோண்டி” (புறநா. 311 : 1); கலித். 114 : 12.

‘பூவல் - செம்மண்; பூவற் படுவிற்கூவற் றோண்டிய’ வென்றார் புறத்தினும்’ (சிலப்.16 : 3 - 6, அடியார்.)

2 - 3. பெய்த சாடி. 4. அந்நீர்மாசில்லாதது.

5. படலை - தழை; படலுமாம். உணங்கல்தினை - உலர்ந்த தினை.

6. இதல் - ஒருவகைப் பறவை; “இதல்கவர்ந்துண்டென” (புறநா. 320 : 11); “இதன்முட் செந்நனை,நெருங்குகுலைப் பிடவம்” (அகநா. 23 : 3). அறவும்- மிகவும்.

7. பொழுது எல்லின்று - சூரியன் ஒளிமழுங்கியது;“ஏகுதி மடந்தை யெல்லின்று பொழுதே” (நற்.264 : 6)

9. இருந்தீமோ - இரு. முது - பேரறிவு:“முதுவா யிரவல” (புறநா. 48, 180 ; பதிற். 66)

10. ஆமான்கன்றை. 11. புன்றலை - சிவந்ததலை.

12. மன்னன் : எழுவாய். நெருநை ஞாங்கர்- நேற்று.

13. பகைமேற் சென்றனன். 14. பாடினி -பாணிச்சி.

15. வாடாத்தாமரை - பொற்றாமரைப்பூ;“எரியகைந் தன்ன வேடி றாமரை, சுரியிரும் பித்தைபொலியச் சூட்டி” (பொருந. 159 - 60); “பைம்பொற்றாமரை பாணர்ச் சூட்டி” (பதிற். 48)

14 - 5. புறநா. 11 : 11 - 7, குறிப்புரை.

(319)