225
தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
5வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ
டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
10இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினு நோகோ யானே.

திணையும் துறையும் அவை.

சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர்கிழார் பாடியது.

(இ - ள்.) முன்செல்லும் 1தூசிப்படையோர் பனையின்கண் உளதாகிய நுங்கினது இனிய செறிவை அயில, இடைச்செல்வோர் பழத்தினது செவ்விக்கனியை நுகர, பின்செல்வோர் நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட கிழங்கினை நுகர இப்படி ஒழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட வேலையுடைய சேனையுடனே கூடிய வலியென்று சொல்லப்பட்டதன் விளைவை இனிக் கேட்பாயாக: கள்ளியோங்கிய களர்நிலமாகிய பாழ்பட்ட இடத்து முள்ளுடைத்தாகிய பெரிய புறங்காட்டின் கண்ணதாயிற்று, பெரிதும் சேட்சென்னிநலங்கிள்ளி கேட்பான் கொல்லோ என அஞ்சி இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க முன்பு தூக்கணங்குருவியினது தூங்கப்பட்ட கூட்டையொப்ப ஒருபக்கத்தே தூங்கப்பட்ட வலத்திலே புரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே பள்ளியெழுச்சிக் காலத்தே தோன்றினும் அதனைக் கேட்டு இறந்துபடாது நோமளவினே னாயினேன் - எ - று.

முன்பு நலங்கிள்ளிசேட்சென்னி கேட்குவன்கொல்லென ஒருசிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலாநிற்கப் பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேனெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

கேளினியென்றது நெஞ்சினை.

‘வென்றிநுவலா’ என்றும், ‘காலைதோன்றின’ என்றும் பாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 4.புறநா. 31 : 15.

7. மு. புறநா. 245 : 3 - 13, 237 : 13.

9. சேட்சென்னிநலங்கிள்ளி : புறநா. 27 : 10.

12-3. “வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய, காலை முரசங்கனைகுர லியம்ப” (சிலப். 14 : 13-4); “இயம்பும்வெண் சங்கெங்கும்”, “குருகுக ளியம்பின வியம்பின சங்கம்” (திருவா. திருவெம்பாவை, திருப் பள்ளியெழுச்சி); “புள்ளரையன் கோயில், வெள்ளை விளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ” (திருப்பாவை, 6)

(225)


1.தூசிப்படை - முன்படை; சேனையின் முதலிற்செல்வோர் பனைநுங்கின் தீஞ்சேறுமிசைய வென்றதும், இடையிற்செல்வோர் பனங்கனிமாந்தவென்றதும், கடையிற்செல்வோர் பனம்பிசிரையும் சுட்ட பனங்கிழங்கையும் நுகரவென்றதும் சேனையின் மிகுதியையும் அது செல்லுதற்குரிய கால நீட்சியையும் உணர்த்தி நின்றன.