34
ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
5நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்பல வரகின்
10பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
15ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
20சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.

(பி - ம்.) 4 ‘முளவே’ 7 ‘அறம்பாடின்றே’ 18 ‘பாடுபரி’

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடியது.

(இ - ள்.) ஆனினது முலையாற் பெறும்பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும் பார்ப்பாரைப் பிழைத்த கொடுந்தொழிலை யுடையோர்க்கும் அவர்செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியுமுளவெனவும், நிலம் கீழ்மேலாம் காலமாயினும் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதலில்லையெனவும் அறநூல் கூறிற்று; தெரிந்த ஆபரணத்தையுடையாள் தலைவ! காலையாகிய அந்திப்பொழுதும் மாலையாகிய அந்திப்பொழுதும் புறவினது கருவாகிய முட்டைபோன்ற புல்லியநிலத்து வரகினது அரிசியைப் பாலின்கட் பெய்து அடப்பட்ட சோற்றைத் தேனோடு கலந்து உண்டு குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடுகூட இலந்தைமரமோங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண் ஒன்றனையும் மறைத்தலில்லாத உள்ளத்துடனே வேண்டிய வார்த்தைகளைப் பலகாலுங்கூறிப் பெரிய கட்டியாகிய கொழுவிய சோற்றை அருந்திய பாணர்க்கு நீங்காத செல்வமெல்லாவற்றையும் செய்தோன் எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாகவென்று சொல்லி நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலேனாயின், 1வாழ்நாட்கு அலகாகிய பலகதிரையுடைய செல்வன் தோன்றுதலறியான்; யானோ எளியேன்; பெரும! இந்தவுலகத்தின்கண் நற்குணங்களால் அமைந்தோர் செய்த நல்வினையுண்டாயின், இமயமலையின் கண்ணே திரண்டு இனிய ஓசையைப் பயிற்றிக் கீழ்காற்றான் வரும் பெரிய முகில் சொரிந்த நுண்ணிய பலதுளியினும் பலகாலம் வாழ்வாயாக - எ-று.

நிலம்புடை பெயர்வதாயினும் என்பதற்கு 2ஊழி பெயருங்காலத்து யாவரும் செய்த இருவினையும் நீங்குதலின், அக்காலத்தும் செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென்றும், நிலத்துள்ளார் யாவரும் இவர் கூற்றிலே நிற்பாராயினுமென்றும் உரைப்பாரும் உளர்.

புன்கம் இவன்பாற் செல்வதற்குமுன்பு பெற்ற உணவாகவும், அமலைக்கொழுஞ்சோறு இவன்பாற் பெற்ற உணவாகவும் கொள்க; அன்றிச் சென்ற இடந்தோறும் பெற்ற உணவாகவுரைப்பினும் அமையும்.

மன்றத்துச் சூடு கிழித்த ஒக்கலொடுகூட வேண்டுமொழிபயிற்றி ஆர்ந்த பாணர்க்கெனக் கூட்டுக.

பாணர்க்கெனத் தம்மைப் பிறர்போலக் கூறினார்.

ஆயிழைகணவ! செய்திகொன்றோர்க்கு உய்தியில்லென அறம்பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வமுழுவதுஞ்செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலையந்தியும் மாலையந்தியும் நின் தாள்பாடேனாயின், பல்கதிர்ச்செல்வன் படுபறியான்; பெரும! யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்றுண்டாயின், நுண்டுளியினும் பலகாலம் வாழ்வாயாக வெனக் கூட்டுக.

கோவதை முதலாயின வாக்காற்சொல்லவும்படாமையின், ஆன்முலை யறுத்தவெனவும், மகளிர்கருச்சிதைத்தவெனவும், பார்ப்பார்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன.

இது, பரிசில்பெற்றுப் போகின்றானை நீ எம்மை நினைத்து வருவையோ என்றாற்கு இவ்வாறு செய்த நின்னை வளவன்வாழ்கவென்று பாடேனாயின், யானிருக்குமிடத்துப் பல்கதிர்ச்செல்வன் படுதலறியான், அதனால் இம்மையின்பம் பெறேனெனவும், செய்ந்நன்றிகொன்றோர்க்கு உய்தியில்லையெனவே மறுமையின்கண் நரகம்புகுவேனெனவும் கூறியதாகக் கொள்க.


(கு - ரை.) 1. “குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா, மடிகொன்று பால்கொளலு மாண்பே” (நீதிநெறி.29.)

1-3. இவ்வடிகளிற் கூறப்பட்டவற்றை, ‘பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலையறுத்தலும் மகளிர் கருவினைச் சிதைத்தலும் பார்ப்பார்த் தப்புதலுமுதலிய பாதகங்களைச் செய்தல்’ (குறள்,110) என உரைநடையிலமைத்தனர் பரிமேலழகர்.

4. கழுவாயுமுள : குறள்,948, பரிமேல்.மேற்.

1-4. “கொலைகளிற் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலைவல் வீரக், கொலைகருக் கொலைதாய் தந்தைக் கொலைகவைக் கோட்டு நல்லான், கொலைமுதற் பிறவு நீங்கும்” (காஞ்சிப்.சருவதீர்த்த. 14)

5. நற்.289 : 2; “நிலந்திறம் பெயருங் காலை யாயினும்” (பதிற்.63 : 6)

6. உய்தி - பிழைத்தல்; “உய்திக் கால முறையீ ரோவென” (சிலப்.10 : 240); “சார்பறுத் துய்தியும்” (மணி.25 : 5)

1-7. “எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்,110); “சிதைவகல் காதற் றாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப், பதவியந் தணரை யாவைப் பாலரைப் பாவை மாரை, வதைபுரி குநர்க்கு முண்டா மாற்றலா மாற்றன் மாயா, உதவிகொன் றார்க்கென் றேனு மொழிக்கலா முபாய முண்டோ” (கம்ப.கிட்கிந்தை. 62) என்பன இங்கே அறியத்தக்கவை.

5-7. ‘பாட்டு’ என்னும் உரிச்சொல் சொல்லுதற்றொழிற் பண்பின்மேல் வருதற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 457; நன். வி.சூ. 458.

6-7. “நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில வென்னும், குன்ற வாய்மை” (கல்லாடம்,4)

12. “இரத்தி மன்றமும்” (மணி.6 : 89). மன்றம் - பலர் இருந்து பேசுதற்குத்திண்ணை போடப்பட்டிருக்கும் மரத்தினடி; பொதியிலெனவும் வழங்கும்.

14. “பெருஞ்சோற் றமலை” (மணி.17 : 2)

19. ஒருசொல்முன் ஒருசொல் வருங்கால் தொகைநிலைவகையானும், எண்ணுநிலைவகையானும், பயனிலைவகையானும் வருதலேயன்றி எச்சவகை, அடுக்குவகை, பொருள்கோள்வகை, ஆக்கவகை, இடைச்சொல் வகை, உரிச்சொல்வகை என்றாற்போலப் பிறவகையாலும் வருதலுண்டென்று கூறி இவ்வடியை இடைச்சொல்வகையான் வந்ததற்கு மேற்கோள் காட்டினர்; தொல்.கிளவி. சூ. 1, கல்.

20-23. புறநா.123 :5 - 6, 302 : 11, 385 : 10 - 12; “நனந்தலையுலகஞ் செய்தநன் றுண்டெனின்......வாழிய பலவே” (பதிற்.63 : 18 - 21)

மு. ‘வாழ்த்து’ என்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 29, இளம்.

(34)


1. ‘வாழ்நாட்கலகாகிய’ என்பது,“வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்” (நாலடி.22) என்பதனைத் தழுவியது.

2. கம்ப.கடல்காண். 2.