166
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
5இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக
10வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய
மறங்கடிந்த வருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
15ிறுநுதற்பே ரகலல்குற்
சிலசொல்லிற் பலகூந்தனின்
நிலைக்கொத்தநின் றுணைத்துணைவியர்
தமக்கமைந்த தொழில்கேட்பக்
காடென்றா நாடென்றாங்
20கீரேழி னிடமுட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்ணாணப் பலவேட்டும்
மண்ணாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
25விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை
என்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்
30உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்
செல்வ லத்தை யானே செல்லாது
மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவள ரிமயம் போல
நிலீஇய ரத்தைநீ நிலமிசையானே.

திணை - வாகை; துறை - பார்ப்பனவாகை.
சோணாட்டு 1 பூஞ்சாற்றூர்(பி-ம். பூஞ்சிற்றூர்)ப்பார்ப்பான் 2 கௌணியன் விண்ணந்தா யனைஆவூர் மூலங்கிழார் பாடியது.

பார்ப்பனவாகையாவது-
“கேள்வியாற் சிறப்பெய்தியானை
வேள்வியான் விறன்மிகுத்தன்று” (பு. வெ. 163)

(இ - ள்.) பெரிதும் ஆராயப்பட்டமிக்க நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது(சிவபெருமானது) வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையேமேவிய நான்கு கூற்றத்தையுடைத்தாய் 3 ஆறங்கத்தாலும்உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்டநூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரதுமிகுதியைச் சாய்க்க வேண்டி அவரது மெய்போன்ற பொய்யைஉளப்பட்டறிந்து அப்பொய்ம்மையை மெய்யென்றுகருதாமல் உண்மைப்பொருளை அவர் களுக்கு ஏற்பச் சொல்லி4 இருபத்தொரு வேள்வித்துறையையும் குறையின்றாகச்செய்து முடித்த புகழமைந்த தலைமையையுடையஅறிவுடையோர் மரபிலுள்ளானே! வேள்வித்தொழிற்குவேண்டி நீ போர்க்கப்பட்ட காட்டுநிலத்துவாழும் 5புல்வாய்க்கலையினது உறுப்புத்தோல் நினதுதோளின்கண் இடப்பட்ட பூணுநூன்மீதே சிறந்துதோன்றக்கொடுமையை நீக்கிய பெறுதற்கரிய கற்பினையும்,அறநூல் புகழப்பட்ட 6 சாலகத்தைச்சூடி, சிறியநுதலினையும் பெரிய அகன்ற அல்குலையும் மெத்தென்றசொல்லையும் பலவாகிய கூந்தலையுமுடைய நின்னுடைய நிலைமைக்குமனமொத்த நின்னுடைய துணைவியராகிய 7 காதலிமார்தத்தமக்குப் பொருந்திய ஏவற்றொழிலைக் கேட்டுச்செய்யக் காடென்றும் நாடென்றும் சொல்லப்பட்டஅவ்விடத்தின்கட் 8 காட்டுள் எழுவகைப்பட்டபசுவானும் நாட்டுள் எழுவகைப்பட்ட பசுவானும் முட்டாதுநீர் நாணும் பரிசு நெய்யை வழங்கியும் எண்ணிறப்பப்பலவேள்விகளை வேட்டும் மண்பொறாமற் புகழைப் பரப்பியும்அவ்வாறு பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்விமுடிபாகியபெரிய காலத்து விருந்தினரைப் பொருந்திய நினதுதிருந்திய மேம்பட்ட நிலைமையை எந்நாளும் காண்பேமாக,யாங்கள்; மேற்றிசைக்கண் பொன்படுகின்ற நெடிய குடகமலைக்கண்ணே முகிலின்கண் இடியேறு முழங்கிற் பூப்பரந்தபுதுநீரையுடைய காவிரி உலகத்தைப் பாதுகாக்கும்குளிர்ந்த புனற்பக்கத்தையுடைய எம் ஊரிடத்தின்கண்உண்ணப்படுவன வற்றையுண்டும் தின்னப்படுவனவற்றைத்தின்றும் ஏறப்படுவனவற்றை யேறியும் கொண்டாடுவேமாகப்போவேன், யான்; போகாது, மழை தலையெடுப்ப உயர்ந்தநெடிய பக்கவரைகளையுடைத்தாய் மூங்கில் வளரும்இமயமலைபோல நிலைபெறுவாயாக, நீ நிலத்தின்மேலே-எ- று.

முதுமுதல்வன் வாய்போகாதென்றகருத்து : 9 அப்பெரியோனாலும் எக்காலமும் அத்தியயனம்பண்ணப்படுமென்றதாகக் கொள்க.

‘வாய்போகாதொன்றுபுரிந்த’ என்பதற்குமெய்ம்மை நீங்காமல் வீடொன்றையுமே புரிந்தவென்றும்,‘பொய்யோராது’ என்பதற்குத் தாம் பொய்ம்மையைவிசாரியாதென்றும், ‘மூவேழ்துறை’ என்பதற்குஇருபத்தொரு கூறுப்பட்ட தருக்கநூலென்றும், ‘ஈரேழின்’என்பதற்குக் காட்டுள் ஏழுநாளும் நாட்டுள் ஏழுநாளுமென்றும்,‘கற்பின்வலைசூடி’ என்பதற்குக் கற்பினால்வலைசூடி யென்றும் உரைப்பினும் அமையும்.

உரவோர் மருக! பொலியக் கேட்பவழங்கியும் வேட்டும் பரப்பியும் இவ்வாறுவிருந்துற்ற நின் திருந்தேந்துநிலை என்றும் இன்றுபோலக்காண்பேமாக, யாமும் ; எம்மூரிடத்து உண்டும் தின்றும்ஊர்ந்தும் இவ்வாறு செய்து நீ தந்த பரிசில்கொண்டுகொண்டாடுவேமாகச் செல்வேன்; நீதானும் இமயம்போலநிலைபெறுவாயாகவென முடிக்க.

நன்றாய்ந்த ஒரு முதுநூலெனவும், கற்பையும்நுதலையும் அல்குலையும் சொல்லையும் கூந்தலையுமுடைய துணைவியர்வலைசூடித் தொழில் கேட்பவெனவும், செல்லாதுநிலிஇயரெனவும் இயையும்.

மூவேழ்துறையுமென்பதற்கு இருபத்தொருகூறுபட்ட அருத்தநூ லென்பாரும் உளர்.

விருந்தென்றது அதிதிகளை; அன்றிஉறுப்புத்தோல் முதலியவற்றாற் புதுமையுற்றவெனினும்அமையும்.

தில் : விழைவின்கண் வந்தது.

‘காவிரி பரக்கும்’ என்பதூஉம்பாடம்.


(கு - ரை.) 1 - 2. புறநா. 1 : 13,56 : 1 - 2; “நிமிர்புன் சடையின் முடியாய்”, “நீர்பரந்தநிமிர் புன்சடை மேலொர் நிலாவெண்மதிசூடி”,“நிமிர் புன்சடை யெம்மிறைவன்”, “நிமிர்புன்சடைப்பெருமான்” (தேவாரம்)

2. “முது முதல்வன்” (சிலப்.12 : ‘மறைமுதுமுதல்வன்’)

13. தொல். தொகை. சூ. 15, ந.; மேற்படி.கிளவி. சூ. 1, ந.; இ - வி. சூ. 75, உரை, மேற்.

16. தொல். தொகை. சூ. 15, ந.;கிளவி. சூ. 1, ந.; இ - வி. சூ. 75. உரை, மேற்.

21. மு. புறநா. 384 : 17. 22. புறநா.15 : 20 - 21.

23. புறநா. 160 : 29 - 30, 384 : 16.

22 - 3. தொல். மரபு. சூ. 73, பேர்.மேற்.

28. “காவிரி புரக்கு நாடுகிழவோனே” (பொருந. 248)

26 - 8. “மலைத்தலைய கடற்காவிரி”(பட்டினப். 6); “குடமலைப் பிறந்த தண்பெருங்காவிரி” (மலைபடு. 527);“குடமலைப் பிறந்தகொழும்பஃறாரமொடு, கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்,காவிரி” (சிலப். 10 : 106 - 8)

30 - 31. எண்ணிடைச்சொல் வினைச்சொற்கண்வந்ததற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 45, ந.

32. புறநா. 157 : 8, குறிப்புரை ; 368: 1 - 3.

33 - 4. புறநா. 2 : 20 - 24,குறிப்புரை.

மு. அந்தணன் வேட்டதற்கும் (தொல்.புறத்திணை. சூ. 16, இளம்.); அந்தணன் வேட்டதற்கும்ஈதற்கும் (புறத்திணை. சூ. 20, ந.) மேற்கோள். (166)


1 பூஞ்சாற்றூர் - சோழநாட்டில்முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ளதோரூர்.

2 கௌணியன் - கௌண்டின்னியகோத்திரத்திற்பிறந்தவன்.

3 வேதத்தின் ஆறங்கங்களாவன:-வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம்,சிக்கை, கற்பமென்பன; “கற்பங் கைசந் தங்காலெண்கண்,டெற்ற நிருத்தஞ் செவிசிக் கைமூக், குற்ற வியாகரணமுகம் பெற்றுச், சார்பிற் றோன்றா வாரண வேதக்,காதி யந்த மில்லை” (மணி. 27 : 100 - 104)

4 இருபத்தொரு வேள்விகளாவன :-ஸோமயஞ்ஞம்,7; ஹவிர்யஞ்ஞம், 7; பாகயஞ்ஞம், 7; அவற்றுள், ஸோமயஞ்ஞங்களேழாவன:- அக்கினிஷ்டோமம், அதியக்கினிஷ்டோமம், உக்தியம்,ஷோடசி, வாஜபேயம், அதிராத்திரம், அப்தோர்யாமமென்பன.ஹவிர்யஞ்ஞங்களேழாவன :- அக்னியாதேயம், அக்னிஹோத்திரம்,தரிசபூர்ணமாசம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம்,ஆக்கிரயணம், ஸௌத்திராமணியென்பன. பாகயஞ்ஞங்களேழாவன:-அஷ்டகை, ஆபார்வணம், சிராத்தம், சிராவணி, ஆக்கிரகாயணி,சைத்திரி, ஆச்வயுஜி யென்பன.

5 யாகத்தலைவர்கள் யாகஞ்செய்யுங்காலத்துக்கலைமானின் உறுப்புத் தோலைப் போர்த்துக்கொள்ளுதல்மரபு; “கடகரி யுரிவை போர்த்த கண்ணுதற் கடவுண்மாறி, இடம்வல மாகப் பாகத் திறைவியோ டிருந்தவாபோல், உடல்கலை யுறுப்புத் தோலி னொளித்திடப்போர்த்து வேள்விக், கடனினுக் குரிய வெல்லாங் கவினுறச்சாத்தினானே” (வில்லி பாரதம், இராசசூய. 104)

6 சாலகம் - ஜாலகம்; இது யாகபத்தினிகள்அணியும் அணிவிசேடம்.

7 யாகங்களுட் சிலவற்றிற் பணிவிடைசெய்தற்குப் பத்தினிகள் மூவருக்குக் குறையாதிருத்தல்வேண்டுமென்பது விதி.

8 காட்டுப்பசு ஆரண்யபசுவென்றும்,நாட்டுப்பசு கிராமப்பசுவென்றும் வழங்கப்படும்.

9 “வேதநாவினர்”, “பாடினார்சாம வேதம்”, “சாமத்தினிசை வீணை தடவிக் கொண்டார்”,“சாமவேத மோதி” (தேவாரம்)