196
ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும்
ஒல்லா தில்லென மறுத்தலு மிரண்டும்
ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே
ஒல்லா தொல்லு மென்றலு மொல்லுவ
5தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே
இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயி லத்தை
அனைத்தா கியரினி யிதுவே யெனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டன மதனால்
10நோயில ராகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை
நாணல தில்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியற் குறுமக ளுள்ளிச்
15செல்வ லத்தை சிறக்கநின் னாளே.

(பி - ம்.) 8 ‘யதுவே’

திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

(இ - ள்.) தம்மாற் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக்கொடுத்தலும், யாவர்க்கும் தம்மாற் கொடுக்க இயலாத பொருளை இல்லையென்றுசொல்லி மறுத்தலுமாகிய இரண்டும் தாளாண்மைப்பக்கத்து உளவாகிய நட்பின்கூற்றினுள்ளன; தனக்கு இயலாததனை இயலுமென்றலும் இயலும்பொருளை இல்லையென்று மறுத்தலுமாகிய இரண்டும் விரைய இரப்போரை மெலிவித்தலன்றியும் ஈவோர்புகழ் குறைபடும் வழியாம்; இப்பொழுது நீ எம்மளவிற்செய்த செய்தியும் அத்தன்மைத் தாகுக; இஃது எத்துணையும் எங்குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம்;அத்தீங்கினால், நின்பிள்ளைகள் நோயின்றியே இருப்பாராக; யானும் வெயிலென்று நினைந்து போக்கை வெறேனாய்ப் பனியென்று கொண்டு மடிந்திரேனாய் விட்டு நீங்காமையாற் கல்லாற் செய்தாற்போன்ற எனது நல்குரவின் மிகுதியான் வளிமறையாகிய மனையிடத்து நாணல்லது வேறில்லாத கற்பினையும் ஒளியையுடைத்தாகிய நுதலினையும் மெல்லிய இயலினையுமுடைய குறுமகளை நினைந்து போவேன்; நின் ஆயுள் மிகுவதாக-எ - று.

‘நோயிலராக நின்புதல்வர்’ என்பதூஉம், ‘சிறக்கநின்னாள்’ என்பதூஉம் குறிப்புமொழி.

அன்றி, பரிசில்மறுத்தலான் இவன் புதல்வர்க்கும் இவனுக்கும் 1தீங்கு வருமென்றஞ்சி நோயிலராகவெனவும், சிறக்கநின்னாளெனவும் கூறினாராக உரைப்பினும் அமையும்.

நல்குரவென்பது, நல்லெனக் குறைந்துநின்றது.

‘கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை’ என்பதற்குக் கல்லாற் செய்தாற்போன்ற பயன் கொள்ளாத யாக்கையையுடைய எனது நல்கூர்ந்த வளிமறையெனவும், கல்லைத் துளைத்தாற்போன்ற காற்றடை மாத்திரையாகச் செய்யப்பட்ட நல்கூர்ந்த என்மனையெனவும் உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 4-5. “இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை” (முதுமொழிக்காஞ்சி, 55)

4-6. கலித். 100 : 12.

1-7. “இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும், வசையன்று வையத் தியற்கை”, “நட்டார்க்கு நள்ளா தவர்க்கு முளவரையால், அட்டது பாத்துண்ட லட்டுண்டல்-அட்ட, தடைத்திருந் துண்டொழுகு மாவதின் மாக்கட், கடைக்குமா மாண்டைக் கதவு” (நாலடி. 111, 271); “இசைவ கொடுப்பதூஉ மில்லென் பதூஉம், வசையன்று வையத் தியற்கையஃ தன்றிப், பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணானாயின், நசைகொன்றான் செல்லுலக மில்” (பழ. 24)

12. வளிமறை - காற்றை மட்டும் மறைப்பது.

13. “உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும், செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல். களவியல், சூ. 22);

“உயிரினுஞ் சிறந்த நாணும்” (நற். 17 : 8); “தாயிற் சிறந்தன்று நாண்டையலாருக்கந் நாண்டகைசால்.... தோளிதிண் கற்பின் விழுமிதன்று” (திருச்சிற். 204); பு. வெ. 278. 14. குறுமகள் - மனைவி.

14-5. ‘அத்தை’ என்னும் இடைச்சொல் முன்னிலைக்கண் அசை நிலையாய் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 439, மயிலை; நன் - வி.சூ. 440.

மு.பாடாண்டிணைத்துறைகளுள் கொடார்ப்பழித்தற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 29, இளம்.; சூ. 35, .); ‘ஒல்லுவதொல்லுமென்னும் புறப்பாட்டினுள், நோயிலராக நின்புதல்வர் எனவும், சிறக்கநின் னாளே எனவும் வரும் மங்கலச்சொல் கெடுகவென்னும் பொருள்பட்டவாறு காண்க’ (தொல். பொருளியல், சூ. 48, இளம்.)

(196)


1.“தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற், றெம்மையிகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை, எரிவாய் நிரயத்து வீழ்வர்கொலென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்” (நாலடி. 58)