(பி - ம்.) 3 - 4. ‘முரவுவாய் முற்றம் பெற்றியாற்று’ 7 ‘யானையவர்’ 8 ‘நெய்யுலைச் சொரிந்த’ 11 ‘பல்லாத் தழீஇ’ 12 - 3 ‘ஆட்டினாகு முலை’ 17 ‘கைமிகக்’ திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - கரந்தை; துறை - கையறுநிலை) ..............................ஆவூர் மூலங்கிழார் பாடியது. (இ - ள்.) அந்தோ! என் இறைவனது அடையாத பெரிய இல்லே! வண்டுகள் படியும் மதுவினால் ஒழியாத மண்டையுடனே யாவர்க்கும் வரையாமல் வழங்கும் மிக்க சோற்றையுடைய முரிந்த குறட்டையுடைத் தாகிய முற்றம் நீரற்ற யாற்றின் ஓடம் எத்தன்மைத்து அத்தன்மைத்தாகக் கண்டேன், நிச்சயமாக; என் கண்மணி சோர்ந்து வீழ்வனவாக; உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வமிக்க திருநகரின்கண் மதத்தான் மயங்கிய யானை உயங்குதலான் நெட்டுயிர்ப்புக்கொண்டாற் போன்ற நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையுடைய பொரியலைப் புதுமாந்தருடைய ஒளிமழுங்கின கண்கள் நிறைய உண்டாக்கினாய் முன்பு; அது கழிந்தது! இப்பொழுது பல ஆனிரையைக் கற்கவேண்டாத வலிய விற்படையைத் தன்னிடத்தே குரலை மிகவுடைய கூகை தன் இனத்தை அழைக்கும்படி அலைத்து நாகினது முலைபோன்ற நறிய பூவையுடைய கரந்தையை அறிவுடையோர் சூட்டுமுறைமையிலே சூட்ட நிரையை இவ்வூரின்கண் மீட்டுத் தந்து நடப்பட்ட கல்லாகிய வென்றிவேலையுடைய இறைவன் இல்லாமையால் தனித்துக் கொய்யப்பட்ட மொட்டை (பி - ம். மட்டை) யாகிய தலையுடனே கைம்மை நோன்புமிகக் கலக்கமுற்ற ஒழிக்கப் பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியையொப்பப் பொலிவழிந்தனை, பல அழகும் இழந்து-எ - று. அம்பியினென்புழி, இன் அசைநிலை. ‘அம்பியினற்றாக’ என்று பாடமோதுவாரும் உளர். கண்: அசை; மன்: கழிவின்கண் வந்தது. எந்தைபேரில்லே! செதுக்கணாரப் பயந்தனை முன்; இனி மகடூஉப் போலப் பல அணியும் இழந்து புல்லென்றனையாய் அம்பியற்றாகக் கண்டேன்; கண்ட என்கண் சோர்கவெனக் கூட்டுக. ஓசையென்றது ஆகுபெயரான் ஓசையையுடைய கறியை; இஃது ஒரு திசைச்சொல். ‘செதுக்கணார’ என்பதற்குச் செதுக்கின குடர்நிறையவென்றுமாம்; கைம்மிஞ்சவென்றுமாம். |