42
ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
5தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற்
புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
10புலிபுறங் காக்குங் குருளை போல
மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
15கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
20நிலவரை யிழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே.

(பி - ம்.) 3 ‘கடலினொலிக்கும் வைந்நுதி’ 4 ‘மின்போலவிர் வருஞாலத்து’ 17 ‘வருவிருந்தயரும்’

திணை-வாகை; துறை-அரசவாகை.

அவனை இடைக்காடனார் பாடியது.

(இ - ள்.) அமையாத வண்மையையும், பகையைக்கொல்லும் பூசலையுமுடைய தலைவ! நினது யானையும் மலைபோலத் தோன்றும்; பெரும! நின்படையும் கடல்போல முழங்கும;் கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டுவிளங்கும்; இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலைநடுங்குதற்கு ஏதுவாகிய வலியையுடையையாதலால், குற்றம் தீர்ந்தது; அது நினக்குப் பழையதாய் வருகின்றது; குளிர்ந்த நீராலுள்ளதாகிய பூச லல்லது வருந்தி ‘எமது துயரத்தைத் தீர்ப்பாயாக வாழி வளவ!’ என்று சொல்லி, நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும் பூசலைக் கனாவின்கண்ணும் அறியாது, புலி பாதுகாக்கும் குட்டிபோலக் குறைவில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்பப் பெரிய விசேடத்தையுடைய புதுவருவாயையுடைத்தாய் நெல்லறுப்பார் கடைமடைக்கட் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும், உழுவார் படைவாளால் மறிக்கப்பட்ட ஆமையும், கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும், பெரிய துறைக்கண்நீரை முகந்துகொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீருமென இவற்றை வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும் மென்புலத்தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே! மலையினின்றிழிந்து பெரிய கடலைநோக்கி நிலவெல்லையினின்று இழியும் பலயாறுகளை யொப்பப் புலவர்யாவரும் நின்னை நோக்கினர்; நீதான் அவர்க்குப் பரிசில் கொடுத்தற்பொருட்டுப் 1 பரிகாரமில்லாத கணிச்சியென்னும் படைக்கலத்தை உயிர்வருந்தச் சுழற்றிக் கூற்றம் சினந்தாற் போலும் வலியுடனே நினக்கு மறுதலையாகிய இருவேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்-எ - று.

அறியாதென்பதனை அறியாமலெனத் திரிப்பினும் அமையும்.

வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும். மென்புலம் - மருதமும் நெய்தலும்.

கணிச்சியைக் குந்தாலியென்றும், மழுவென்றும் சொல்லுவர்.

யாணர்த்தாகி விருந்தயரும் நன்னாடென்க.

பொருந! புலவரெல்லாம் நின்னோக்கினர்; நீ அரசுதலைபனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால், இச்செய்தி புரைதீர்ந்தது, நினக்குப் புதுவதன்றாகலினெனக் கூட்டுக.
புரைதீர்ந்தன்றென்பதற்கு உயர்ச்சி தீர்ந்ததெனப் பொருளாக்கி, பொருந! நீ ஆற்றலையாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; புலவரெல்லாம் பரிசில் பெறுதற்பொருட்டு நின்னோக்கினர்; இச்செய்தி நினக்குப் புதிதன்று; ஆகலின் உயர்ச்சி தீர்ந்ததென்றுரைப்பினும் அமையும்.


(கு - ரை.) புறநா. 54 : 7.

2. யானைக்கு மலை : புறநா. 38 : 1. பெரும்பாண். 352; மதுரைக். 46; மலைபடு. 572.

6, புறநா. 76 : 2.

7. புனற்பூசல் - நீர்விளையாட்டால் உண்டாகும் சண்டை.

9. இவ்வடியை மனத்துட் கொண்டு சிலப்பதிகாரஉரையில் ‘பகைவர் தெறுதலைக் கனவிலுநினைந்தறியாத வெனவுமாம்; (சிலப். 14 : 200, உரை) என அடியார்க்குநல்லார்எழுதியுள்ளார்.

7 - 9. ‘நீரழி பாக்கமென்றது வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகைவரான் அழியாத பாக்கமென்றவாறு’ (பதிற். 13 : 12, உரை; 28 : 11 - 3)

10. “குட்டியைத் தின்ன லாமோ கோட்புலி புறத்த தாக”(சீவக. 1134); புலிதானே புறங்காக்கக் குட்டிகோட் படாதென்ன, ஒலியாழி யுலகுரைக்கு முரைபொய்யோ”, “புன்புற மயிரும் பூவாக் கட்புலம் புறத்து நாறா, வன்பறழ் வாயிற் கவ்வி வல்லிய மிரிந்த” (கம்ப. சூர்ப்பநகை. 102, கடறாவு. 7)

17 - 8. வன்புலம் - குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும்; இவை வன்பால் எனவும் வழங்கும். மென்புலம் - மருதமும் நெய்தலும்; மென்பாலெனவும் வழங்கும். “வன்புல...........பொருந : என்றக்காற் பகைவேந்தரை வென்றிகொள்ளுங்கால் அவர்தாமே தத்தம் பொருள் பிறர்க் களிப்பாரென்னும்பொருள் தோன்றினுந்தோன்றுமென்பதல்லது ஒருதலையாக உள்ளுறையுவமங் கோடல் வேண்டுவதன்று; என்னை? ‘தாய் சாப்பிறக்கும்.......அவனூர்’ (ஐங்குறு. 24) என்றாற்போலக் கூறாது அந் நாட்டுக்கருங்களமர் முதலாயினோர் வருந்தாமற் பெறும் பொருள் பிற நாட்டார்க்கு விருந்து செய்யத் தகுமென்று, அந்நாட்டினது வளமை கூறினமையினென்பது” (தொல். உவம. சூ. 31, பேர்.)

19 - 21. “கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப், பல்வேறு வகையிற் பணிந்த மன்னர்” (பெரும்பாண். 427 - 8); “தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின், மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு, யாமவ ணின்றும் வருதும்” (மலைபடு. 51 - 3); “கடுவரை நீரிற் கடுத்துவர” (பு. வெ. 11); “பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம்போய், மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல்” (கம்ப. கையடை. 15)

22.புறநா. 3 : 12, குறிப்புரை பார்க்க; கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே” (பதிற். 14 : 10)

23 - 4. ‘கூற்று......நோக்கினையே: என்பது வெகுளியுவமம்’ (தொல். உவம. சூ. 19, பேர்.)

21 - 4. புறநா. 203; நெருந லென்பது சென்றது நின்ற, இன்னுஞ் செல்லா நின்றது முன்சென்று, வருநாள் கண்டா ரியாரே யதனால், ஒருநா ளகப்படுத் துடையோ ரின்மையின், நல்லது நாடுமி னுள்ளது கொடுமின், வழாஅ வின்பமும் புணர்மி னதாஅன்று, கீழது நீரகம் புகினு மேலது, விசும்பின் பிடர்த்தலை யேறினும்புடையது, நேமி மால்வரைக் கப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து, மீளிக்கொடுநா விலக்குதற் கரிதே” (ஆசிரியமாலை)

மு. கொள்ளார்தேஎங்குறித்த கொற்றமெனுந் துறைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 10, இளம்.; சூ. 12, ந.

(42)


1. மருந்து - பரிகாரம் புறநா. 3 : 12; கலித். 89 : 10.