76
ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும்
புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை
இன்றி னூங்கோ கேளலந் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்
5நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
10பீடுஞ் செம்மலு மறியார் கூடிப்
பொருது மென்று தன்றலை வந்த
புனைகழ லெழுவர் நல்வல மடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே.

(பி - ம்.) 6 ‘தேம்பாய் தெரியல்’

திணை - வாகை; துறை - அரசவாகை.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற 1நெடுஞ்செழியனை இடைக்குன்றூர்கிழார் பாடியது.

(இ - ள்.) ஒருவனை ஒருவன் கொல்லுதலும்ஒருவற்கு ஒருவன் தோற்றலும் புதிதன்று; இந்தவுலகத்தின்கண்முன்னே தொட்டு இயல்பு; இன்றையின்முன் கேட்டறியேம்:திரண்டதாளையுடைய மன்றத்திடத்து வேம்பினது பெரியகொம்பின்கண்உண்டாகிய ஒள்ளிய தளிரை நீண்ட கொடியாகிய உழிஞைக்கொடியுடனேவிரவிச் செறியத் தொடுக்கப்பட்ட தேன்மிக்க மாலையைவளையமாலையுடனே சிறப்பச் சூடி ஓசையினிய தெளிந்தபோர்ப்பறை யொலிப்பக் காட்சி தக நாடுபொருந்தியசெல்வத்தினையுடைய பசும்பொன்னாற்செய்த பூணை அணிந்தநெடுஞ்செழியனது பெருமையையும் உயர்ந்த தலைமையையும்அறியா ராய்த் தம்மிற்கூடிப் பொருவேமென்று தன்னிடத்துவந்த புனைந்த வீரக்கழலினை யுடைய 2 இருபெருவேந்தரும்ஐம்பெருவேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி அடங்கத்தான் ஒருவனாய் நின்று பொருது களத்தின்கட் கொல்லுதல்-எ- று.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவதன்று; இவ்வுலகத்து இயற்கை; செழியன் பொருதுமென்றுவந்த எழுவர் நல்வலம் அடங்க ஒருவனாகித் தெரியலைமாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப்பொருதுகளத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலமெனக் கூட்டிவினை முடிவுசெய்க.


(கு - ரை.) 2. புறநா. 42 : 6;“பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும், புதுவ தன்றே”(கலித். 22 : 3 - 4);

“புதுவ தன்றே தொன்றியல்வாழ்க்கை” (சிலப். 30 : 140)

4. மன்றவேம்பு : புறநா. 45 : 2, 79 :2, 317 : 7. மாச்சினை : பொருந. 143-4.

4-5. புறநா. 22 : 20-21, குறிப்புரை; 77:2-3;போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த, கடவுள்வாகை” (பதிற். 66); “ஆரொடேர்பெறத்துளவியறும்பையஞ் சுழியச் சூடினான்” (கம்ப. முதற்போர். 115)

5. பகைவருடைய ஊர்மதிலை வளைத்துப்போர்செய்யச் செல்கின்றானாதலின் உழிஞை கூறினார்.

8. கிணைகறங்கச் செல்லுதல் : புறநா.78 : 12, 79 : 3.

9-13. புறநா. 19 : 17, குறிப்புரை.

12. எழுவர் - சேரன், செம்பியன்,திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான்,பொருநன் என்பார்; அகநா. 36 : 15 - 20.

மு. நூழிலென்னுந் துறைக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம்.நெடுஞ்செழியனுடைய இயல்பையும் வெற்றியையும் கூறினமையால்இச்செய்யுள் அரசவாகையாயிற்று. 77, 78-ஆம் செய்யுட்களுக்கும்இப்படியே கொள்க. (76)


1. 9-ஆம் அடியில் தலைவன்பெயரின் ஒரு பகுதி வந்துள்ளது,

2. மதுரைக். 55-6, குறிப்புரை