77
கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்
குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர்
நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
5நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலியநின்றோன்
யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்று மிலனே பால்விட்
டயினியு மின்றயின் றனனே வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
10வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை
அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக்
கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை
மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே.

(பி - ம்.) 11 ‘அழுங்கப்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) சதங்கை வாங்கப்பட்டகாலிலே ஒள்ளிய வீரக்கழலினைச் செறித்துக் குடுமியொழிக்கப்பட்டசென்னிக்கண்ணே வேம்பினது ஒள்ளிய தளிரை நெடியகொடியாகியஉழிஞைக்கொடியோடு சூடிக் குறிய வளைகளையொழிக்கப்பட்டகையின்கண்ணே வில்லைப் பிடித்து நெடிய தேரினது மொட்டுப்பொலிவுபெற நின்றவன் யாரோதான்? யாரேயாயினும்,அவன் கண்ணி வாழ்வதாக; தாரையணிந்து ஐம்படைத்தாலிகழித்ததும் இலன்; பாலையொழித்து உணவும் இன்றுண்டான்;முறைமுறையாக வெகுண்டு மேல்வந்த புதியவீரரை மதித்ததும்அவமதித்ததும் இலன்; அவரை இறுகப் பிடித்துப் பரந்தஆகாயத்தின்கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணேபொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததுவும், இவ்வாறுசெய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன்-எ- று.

யார்கொலென்றது வியப்பின்கட்குறிப்பு.

இழித்தன்றென்பது இழிந்தன்றெனமெலிந்துநின்றது.


(கு - ரை.) 1. கிண்கிணிக்கால் :புறநா. 198 ; 5, கழல் தொட்டு புறநா. 83 : 1.

2. குடுமி களைதல் : “ஏந்து, நெடுமதில்கொண்டு நிலமிசையோரேத்தக், குடுமி களைந்தானெங்கோ” (பு - வெ. 109). நுதல் - முன்தலை.

2-3. புறநா. 76 : 4 - 5, குறிப்புரை.பவர் - கொடி.

1-4. புறநா. 72 : 2, குறிப்புரை.

5. நெடுந்தேர்க் கொடுஞ்சி: மதுரைக்.752; மணி. 4 : 48; “நெடுந்தேர்க் கொடுஞ்சி பற்றி,நின்றோன்” (அகநா. 110 : 24 - 5); கலித். 85: 18.

6. கண்ணியை வாழ்த்தல்: புறநா.198 : 11; “வாழ்க நின் கண்ணி வாய்வாள் வேந்தென”(மணி. 18 : 63);

“வாழ்கநுங் கண்ணி மாதோ” (சீவக.1890); “வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று” (பு.வெ. 13)

7. தாலி - ஐம்படைத்தாலி; காத்தற்கடவுளான திருமாலின் சங்கம், சக்கரம், கதை, கட்கம்,சார்ங்கம் என்னும் ஆயுதங்களின் வடிவமாக அமைக்கப்படும்ஓர் ஆபரணம். இதனைப் பஞ்சாயுதமென்றும், பிறந்தஐந்தாநாளில் பிள்ளைகளுக்கு இதனை அணிவித்தல்மரபென்றுங் கூறுவர்; “பொன்னுடைத் தாலியென்மகன்”(அகநா. 54); “மழலை, சிந்துபு சின்னீ ரைம்படைநனைப்ப”, “ஐம்படைத் தாலி........புதல்வர்”(மணி. 3 : 137-8, 7 : 56 - 7); “எழிலார்திருமார்பிற் கேற்கு மிவையென், றழகிய வைம்புடையுமாரமுங் கொண்டு” (பெரியாழ்வார் திருமொழி,1 : 4 - 5); “பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்படர்களையுமாயனிவ னென்றுதெளி வெய்தத், தண்டுதனு வாள்பணில நேமியெனுநாமத் தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே” (கலிங்கத்.அவதாரம், 9); “தாலி யைம்படை தழுவு மார்பிடை”(கம்ப. நாடு. 58); “ஐம்படை மார்பிற் காணேன்”(திருவிளை. 39 : 25)

9. வம்பமள்ளர் : புறநா. 78 : 7, 79: 5.

7-10. “இந்த றகரஉகரம் ‘தாலிகளைந்தன்றுமிலனே’எ - ம், ‘வியந்தன்றுமிழிந்தன்று மிலனே’ எ - ம்உயர்திணைக்கண்ணும் வந்ததாலெனின், அவை ‘களைந்தான்’‘வியந்தான்’, ‘இழிந்தான்’ என்பனவற்றிற்குமறையாய்க் ‘களைந்திலன்’ ‘வியந்திலன்’ ‘இழிந்திலன்’என நிற்கின்றவை ‘களைந்தன்றுமிலன்’ ‘வியந்தன்றுமிலன்’ ‘இழிந்தன்றுமிலன்’ என முற்று வினைத்திரிசொல்லாய்நின்றன” (தொல். வினை. சூ. 20, ந.)

10-11. பெரும்பாண். 419; மலைபடு.386.

13. அகத்தடக்கல் : புறநா. 6 : 25.192 : 13.

9-13. நெடுஞ்செழியனுடைய வீரமிகுதியையும்ஆழமுடைமையையும் இவ்வடிகள் தெரிவிக்கும் இனிமை மிகப்பாராட்டற்பாலது.

மு. உழிஞைத்திணைத்துறைகளுள்ஒன்றாகிய ‘திறற்படவொரு தான் மண்டிய குறுமையும்’என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ.10, இளம்.); ‘மதிமைசாலா மருட்கையானே.....கிண்கிணிகளைந்தகா லொண்கழ றொட்டென்னும் பாட்டுச்சிறியோர் பெருந்தொழிலைச் செய்தது’ (தொல்.மெய்ப்பாடு. சூ. 7, பேர், இ. வி. சூ. 578, உரை)