78
வணங்குதொடைப் பொலிந்த வலிகெழுநோன்றாள்
அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந்
தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன
மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து
5விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர்
10மாணிழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூ ராங்கட்
டெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே.

(பி - ம்.) 1 ‘மதனுடைநோன்றாள்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) வளைந்த 1 சந்துகளாற்பொலிந்த வலிபொருந்திய போரின்கண் நிலைதளராதபொறையினையுடைய தாளினையும் வருத்துவதற்கரியமிக்க வலியையுமுடைய என் இறைவன் மூரிநிமிர்ந்துமுழையின்கட் கிடந்த புலி தான்விரும்பியதோர்இரையை நோக்கிவந்தாற்போன்ற மாறுபடுதற்கரியமார்பத்தை மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து, ‘சிறப்புடையேம்,படையாற் பெரியேம் யாங்கள், நம்மிற் பொருவானும்இளையன், கொள்ளையும் பெரிது’ என இகழ்ந்துவந்த 2நிலையில்லாத வீரர் புற்கென்ற கண்ணராய் நின்றவிடத்துநில்லாது புறத்தே போக அவரை இப்போர்க்களத்தின்கண்ணேகொன்றிடுதலும் உடம்படானாய் அவ்விடத்து அவர்மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் நாணினராய்இறந்துபடத் தந்தையருடையவாகிய தங்களூரிடத்துத்தெளிந்த போர்ப்பறை யொலிப்பச் சென்று அவ்விடத்தேகொன்றான்-எ - று.

தந்தைதம்மூரென்றதனை, “ஏவ லிளையர்தாய்வயிறு கரிப்ப” என்றாள்போலக் கொள்க.தந்தைதம்மூரென்றது, தாம் தோன்றிச் செய்த நகரியன்றிஉறையூரும் கருவூருமுதலாகிய ஊர்களை.


(கு - ரை.) 2. என் ஐ-எனதுதலைவன்; புறநா.84 : 1, 85 : 1, 89 : 9, 262 : 5; “என்னைமுன் னில்லன்மின்”(குறள், 771). முணங்கு நிமிர்தல்-வளைவு நிமிர்தல்.புறநா. 52 : 2. குறிப்புரை.

4. புறநா. 10 : 9-10, குறிப்புரை.

1-4. புறநா. 52 : 1 - 4, குறிப்புரை.

6. இளையன் : புறநா. 72 : 2,குறிப்புரை.

7. வம்பமள்ளர் : புறநா. 77 : 9, 79: 5.

9. அவரடுதல்; இரண்டாம் வேற்றுமைத்தொகை.

12. கிணைகறங்கச் செல்லல் : புறநா.76 : 8, குறிப்புரை.

9-12. “சிறுபடையான் செல்லிடஞ்சேரி னுறுபடையா, னூக்கமழிந்து விடும்” “சிறைநலனுஞ்சீரு மிலரெனினு மாந்தர், உறை நிலத்தோ டொட்டலரிது” (குறள், 498-9). உழிஞையைச் சூடிய வீரன்பகைவருடைய மதிலைச்சூழ்ந்து போர்செய்ய வேண்டுமென்பதுவிதியாதலாலும் இச்செழியன் உழிஞை சூடியவனாதலாலும்இங்ஙனம் போர் செய்வானாயினனென்பதுமொன்று; புறநா.76, 77-ஆம் பாடல்களைப் பார்க்க. (78)


1 சந்து-மூட்டுவாய;் “இருகாலுஞ்சந்துபோனால்” (காளமேகம்)

2 “வம்புநிலை யின்மை” (தொல்.உரி. சூ. 29)