130
விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட்
டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ
நின்னுநின் மலையும் பாடி வருநர்க்
கின்முகங் கரவா துவந்துநீ யளித்த
5அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க்
குடகட லோட்டிய ஞான்றைத்
தலைபெயர்த் திட்ட வேலினும் பலவே.

(பி - ம்.) 1. ‘மணிப் பசும்பூணாய்’, ‘மணிக்கொடும் பூணாய்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) விளங்கிய மணிகளான் இயன்ற வளைந்த பூணாகிய ஆரத்தையுடைய ஆயே! நினது நாட்டின்கண் இளையபிடி ஒருகருப்பம் பத்துக் கன்று பெறுமோதான்? நின்னையும் நின்மலையையும் பாடிவரும் பரிசிலர்க்கு இனிய முகத்தை ஒளியாது வெளிப்படுத்திக் காதலித்து நீ கொடுத்த தலைமையையுடைத்தாகிய யானையை யெண்ணின், நீ கொங்கரை மேல்கடற்கண்ணே ஓட்டப்பட்ட நாளில் அவர் புறக்கொடுத்தலால் தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகடப்பட்ட வேலினும் பல-எ - று.

தலைப்பெயர்த்திட்ட வேலென்ற கருத்து : 1படைக்கலமில்லாதாரை ஏதஞ்செய்வாரில்லையாதலின், தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப் பட்ட வேலென்பதாம்; அன்றி, புறக்கொடுத்தோடுகின்றார் முன்னோக்கிச் சாய்த்துப் பிடித்தவேலென்பாரும் உளர்.

இதனால், கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு.


(கு - ரை.) 1. புறநா. 200 : 8.
னளரல ஒழிந்த ஏனைப்புள்ளி சிறுபான்மை விளியேற்றதற்கும் (தொல். விளி. சூ. 12, இளம்.; சே.; கல்.; ந.), யகார வீற்றுயர்திணைப் பெயர் அளபெடையாகிய விளியுருபேற்றதற்கும் (நன். சூ. 309, மயிலை.) மேற்கோள்.

1 - 2. 'விளங்குமணிக் கொடும்பூ ணாஅய்......பத்தீனும்மோ : என்புழி யகரம் விளியேற்றதாலெனின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின் எடுத்தோதிற்றிலராயினும் செய்யுண் மருங்கினென்னும் அதிகாரப்புறநடையான் இந்நிகரன வெல்லாம் அமைத்துக்கொள்க' (தொல். விளி. சூ. 35, தெய்வச்.); யகாரவீறு சேய்மைக்கண் அளபெடுத்தல் விளியுருபாமெனக் கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர்; (இ. வி. சூ. 212, உரை). "விளங்குமணிக் கொடும்பூணாய்" என விளியேற்றது; நேமி. சொல், 28.

3. மலையைப்பாடுதல் : புறநா. 131 : 3, 143 : 12; "தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை, வான்பொரு நெடுவரை வளனும் பாடி" (சிறுபாண். 127 - 8, குறிப்புரை)

3 - 5. புறநா. 129 : 6, குறிப்புரை.

(130)


1. சிறுபஞ்ச. 41 ; “நிராயுதன், மார்பி லெய்யவோ வில்லிகல்வல்லதே", "நின்ற வன்னிலை நோக்கிய நெடுந்தகை யிவனைக், கொன்றலுன்னிலன் வெறுங்கைநின்றானெனக் கொள்ளா" (கம்ப. வாலிவதை. 90, முதற்போர். 251); "நிராயுதரைக் கொன்றா ரெனுந்தீமை, எய்தாமை வேண்டும்" (பெரிய. ஏனாதி. 39)