(கு - ரை.) 1. கானல் - மலைப்பக்கம். அல்கும் - தங்கும். 2. புல்வாய் - ஒருவகைமான். ‘இரலை’ என்னும் ஆண்பாற்பெயர் புல்வாய்ச் சாதிக்குரியதென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். மரபு. சூ. 44, பேர். 3. பொலம் - பொன் ; பொற்றாமரைப்பூ ; ஆகுபெயர். பாறுமயிர் அவிய - சிதறிய மயிர் அடங்கும்படி. 4. உறைக்கும் - துளிக்கும். 3 - 4. “பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி”, “பனிபழுநிய பல்யாமத்துப், பாறுதலை மயிர்நனைய” (புறநா. 279 : 9, 377 : 1 - 2) 5. மன்றப்பலவு - பொதுவிடத்திலுள்ள பலா ; பொருநர் முதலிய இரவலர் பொதுவிடத்தில் வந்து தங்குதலும் அங்குள்ள மரத்தில் தம் வாச்சியங்களைத் தொங்கக்கட்டுதலும் மரபு ; புறநா. 128 : 1 ; ஐந்திணை யெழுபது, 4. 6. புறநா. 381 : 12 - 3, 397 : 10. 7. ஓர்ப்ப - செவிசாய்த்துக் கேட்கும்படி ; புறநா. 157 ; 12; “பாட லோர்த்து நாடக நயந்தும்” (பட்டினப். 113). இசைஇ - முழக்கி. 8. கருங்கோல் - பெரியதண்டு ; “கருங்கோற் குறிஞ்சி மதனில் வான்பூ” , “பெருங்கோற் குறிஞ்சி” (நற். 268 : 3, 301 ; 1) ; “கருங்கோற் குறிஞ்சிப்பூ” (குறுந். 3 ; 4) ; “கருங்கோற் குறிஞ்சி” (அகநா. 308 : 16). அடுக்கம் - மலைப்பக்கம் ; குறிஞ்சியையுடைய அடுக்கம் ; தலைவனையும் அவனுடைய மலைமுதலியவற்றையும் பாடுதல் மரபு ; புறநா. 130 ; 3, குறிப்புரை ; 143 : 12, குறிப்புரை. 9. புலிப்பல் தாலி - புலியின் பல்லைக் கோத்துச்செய்த கழுத்தணி ; “புலிப்பற் றாலிப் புதல்வர்” (குறுந். 161 : 3) ; “புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி” (அகநா. 7 ; 18) ; “மறங்கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற, மாலை வெண்பற் றாலி” (சிலப். 12 : 27 - 8) 11. முளவுமான் கொழுங்குறை - முள்ளம்பன்றியின் கொழுவிய தசை ; “முளவுமாத் தொலைச்சிய” (புறநா. 325 ; 6) ; “முளவுமா வல்சி” (ஐங்குறு. 364 : 1) ; “முளவுமாத் தொலைச்சுங் குன்றம்” (அகநா. 142 ; 8) “முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடு. 176) 12. விடர்முகை - வெடிப்பையுடைய குகை ; “விடர்முகை முழங்கும்” (ஐங்குறு. 395 : 2) ; “விடர்முகை யடுக்கம் பாய்தலின்”, “விடர்முகை முழங்கும்”, “அஞ்சுவரு விடர்முகை” (அகநா. 47 : 6, 143 : 7, 272 : 4) 13. புகர்முகவேழம் ; புறநா. 373 : 29. மூன்று : குறை, சாந்தம், மருப்பு என்பன. 14. புலித்தோலில் மேற்கூறிய மூன்றையும் குவித்து. 15. இறைநல்கும் - திறையாகக் கொடுக்கும். 16. ஆயாகிய அண்டிரன் ; கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்” (புறநா. 128 : 5 ; குறுந். 84 : 3) ; “ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல்”, “வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்”, “தண்டா ரண்டிரன்” (புறநா. 129 : 5, 131 : 2, 241 : 1 - 2) 17. ஞாயிறு ; விளி. 18. கொன் - பயனின்மை. 16 - 8. புறநா. 8-ஆம் பாடலின் கருத்து. (374)
|