170
மரைபிரித் துண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றி லங்குடிச் சீறூர்
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழு துண்மார் நாப்ப ணொல்லென
5இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டற்
குறுக லோம்புமின் றெவ்வி ரவனே
10சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து
நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல்
பண்ணமை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி
நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க்
15கிரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்தெறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் லன்ன வல்லா ளன்னே.

திணை - வாகை; துறை - வல்லாண்முல்லை;தானைமறமுமாம்.

அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

வல்லாண் முல்லையாவது :-
“இல்லும் பதியு மியல்புங் கூறி
நல்லாண் மையை நலமிகுத் தன்று” (பு. வெ. 177)

(இ - ள்.) மரையாவாற் பிரித்துண்ணப்பட்டநெல்லியாகிய வேலியை யுடைத்தாய் அதனது விதையாகியபரலுடைத்தாகிய முற்றத்தினையுடைய அழகிய குடியையுடையசிறிய ஊரின்கட் பகற்பொழுதெல்லாம் வேட்டையாடித்திரிந்த கல்வியில்லாத காட்சியையுடையவில்லாகிய ஏரால் உழுதுண்பாருடைய நடுவே ஓசையையுடைத்தாகஇழிந்த பிறப்பினையுடைய புலையன் தனது வலிய கை சிவப்பவலியான் முடுக்கிக் கொட்டும் வலிய கண்ணையுடையஅச்சத்தைச் செய்யும் துடி புலி கிடக்கும் நெடியமலையின்கட் பேராந்தையோடுகூடி யொலிக்கும்மலைபொருந்திய நாட்டையுடையனாகிய கூரிய வேலையுடையபிட்டனை அணுகுதலைப் பாதுகாமின் பகைவீர்! அவன்றான்சிறுகண்ணையுடைய யானையினது வெளியகோடு தரப்பட்டஒளிவிளங்கு முத்தத்தை விறலியருக்குக் கொடுத்து நாரைப்பிழிந்து கொள்ளப்பட்ட விரும்பத்தக்க 1கள்ளாகிய தெளிவைப் பண் பொருந்தின நல்லயாழினையுடைய பாணர் சுற்றத்தை நுகர்வித்து இவ்வாறுதன்பாற் பரிசில் நச்சிவந்தோர்க்கு மெல்லியனாயிருத்தலல்லதுபகைவர்க்கு இரும்பைப் பயன்படுத்துகின்ற வலியகையையுடைய கொல்லன் விசைத் தடிக்கப்பட்ட கூடத்தோடேயேற்று மாறுபடும் உலையிடத்து அடைகல் போலும் வலியஆண்மையையுடையன்-எ - று.

பிட்டன் நசைவர்க்கு மென்மையல்லதுபகைவர்க்குக் கல்லன்ன வல்லாளனாதலால், தெவ்வீர்!அவனைக் குறுகலோம்புமினெனக் கூட்டுக.

வலிதுரந்தென்பதற்கு மாற்றார்வலியைக்கெடுத்தெனினும் அமையும்.

நார்பிழிக்கொண்டவென்பதற்குக்2 கோதைப் பிழிந்து கொண்ட வெனினும் அமையும்.


(கு - ரை.) 1. மரை - மரையா;ஒருவகைவிலங்கு; “மரையா மரல்கவர" (கலித்.6)

1 - 2. நெல்லிக்காயை மரையா உண்ணும்;“நெல்லி, மரையின மாருமுன்றிற், புல்வேய் குரம்பைநல்லோ ளூரே”, “புரிமட மரையான் கருநரை நல்லேறு,தீம்புளி நெல்லி மாந்தி” (குறுந். 235, 317);“புல்லிலைப், பராரை நெல்லி யம்புளித்திரள்காய், கான மடமரைக் கணநிரை கவரும்”, “பளிங்கினன்ன தோற்றப், பல்கோ ணெல்லிப் பைங்காயருந்தி,மெல்கிடு கவுள மடமரை யோர்க்கும்” (அகநா.69, 399)

4. புறநா. 331 : 2; “வில்லேர்வாழ்க்கை விழுத்தொடை மறவர்”, “வானம் வேண்டாவில்லே ருழவர்” (அகநா. 35, 193); “வில்லேருழவர்பகை கொளினும்” (குறள், 872)

6 - 7. புறநா. 370 : 6; “துடிக்குடிஞைக்குடிப்பாக்கத்து” (பொருந. 210); “ஆகுளி கடுப்பக்,குடிஞை யிரட்டு நெடுமலை” (மலைபடு. 140 - 41); “உருடுடிமகுளியிற் பொருடெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞையநெடும்பெருங் குன்றம்” (அகநா. 19 : 4 - 5)

8. பிட்டன் : புறநா. 172 : 8; அகநா.77, 143.

10 - 11. யானைக்கோடு முத்தம் பயத்தல்: புறநா. 161 : 16 - 7; “முத்துடை மருப்பின் மழகளிறுபிளிற” (பதிற். 32); “பெருங்களிற்று முத்துடைவான்கோடு” (முருகு. 304 - 5); “யானை, முத்தார்மருப்பு” (குறிஞ்சிப். 35 - 6); "யானை, முத்துடைமருப்பின்” (மலைபடு. 517 - 8.)

12. புறநா. 232 : 3, 367 : 7; “நாரரிநறவம்” (பரி. 6 : 49); “நாரரி நறவுண் டிருந்ததந்தைக்கு”, “பன்மீன் கொள்பவர் முகந்தவிப்பி,நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்” (அகநா.216, 296)

13. பண்ணமை நல்யாழ் : புறநா.164 : 11.

12 - 3. புறநா. 160 : 10 - 11. 17. உலைக்கல்: குறுந். 12.

14 - 7. புறநா. 109 : 11 - 8, 178 : 6 - 11.

16. கூடம் - சம்மட்டி.

(170)


1 புறநா. 224 : 1 - 4.

2 புறநா. 114 : 4.