60
முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
5சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
10வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே.

(பி - ம்.) 2 ‘செய்ம்மீ’ 12 ‘யோர்க்குமா’

திணை-அது; துறை-குடைமங்கலம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

(இ - ள்.) கடல் நடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப்போலச் செவ்வாய்மீன் விளங்கும் மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணேநின்ற உவாநாளின் மதியத்தைக் கண்டு காட்டுள் வாழும் மயிலைப்போலச் சுரத்திடைப்பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும் கடிதின் விரைந்து தொழுதேமல்லேமோ பலகால்? கடற்கரையிடத்துக் கழியினீரான் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச் செலுத்தும் வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை யொக்கும் எங்கோன், வென்றியாக முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய வளவனது வெயிலை மறைத்தற்கு எடுத்த உட்குப் பொருந்திய தலைமையையுடைய தாமம் பொருந்திய வெண்கொற்றக் குடையை ஒக்குமெனக் கருதி-எ-று.

செம்மீன் இமைக்கும் விசும்பின் உச்சி நின்றமதியை உவமித்தமையின், இது தலைப்பெயலுவமையாய்நின்றது.

கானல்-கடற்கரை.

வெயிலென்றது, 1பகைவரானும் கொடியோரானும் வரும் வெம்மையை.

இராச்சியத்தைப் பொறுத்துநடத்துமாறு நோக்கி நோன்பகட்டோடு உவமித்தமையின், 2இறப்ப இழிந்த ஆனந்தவுவமைஅன்றாயிற்று.

உவாமதியைக் கண்டு வளவன்வெண்குடையை ஒக்குமென விறலியும் யானும் பலகால் தொழுதேமல்லேமோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

வளவன் வெண்குடையைக்காட்டித் தொழுமினென்றார்க்கு 3நிறைமதி தொழப்படாதாயினும், குடையோடு ஒப்புமைகண்டு தொழுத யாம் குடைதன்னைக் கண்டால் தொழுதல் சொல்லவேண்டுமோவென அதன் சிறப்புக் கூறியவாறு.
செம்மீன்-திருவாதிரையுமாம்.


(கு - ரை.) 1. முந்நீர் : புறநா. 9 : 10, குறிப்புரை.

2. மாகவிசும்பு : புறநா. 35 : 18, குறிப்புரை.

1-2. “மீன்றிமில் விளக்கமும்” என்பதற்கு இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர்; சிலப். 6 : 142, அடியார்.

3. உவவு-உவா; பூரணை.

5. சில்வளைவிறலி : புறநா. 64 : 2, 103 : 4; பதிற். 40 : 21, 57 : 6, 78 : 3; ‘சில்வளை விறலியென்றது பல்வளையிடுவது பெதும்பைப் பருவத் தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு’ (பதிற். 57 : 6, உரை)

7-9. புறநா. 84 : 6, 90 : 6 - 8; “கதுமென மண்ட, அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப, நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச், சாகாட் டாளர் கம்பலை” (பதிற். 27 : 12 - 4); “அள்ளற் றங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே” (மதுரைக்259-60); “மடுத்தவா யெல்லாம் பகடன்னான்” (குறள், 624); “நிரம்பாத நீரியாற்றிடுமணலு ளாழ்ந்து, பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி” (சீவக. 2784); “குண்டுதுறை யிடுமணற் கோடுறவழுந்திய, பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல” (பெருங். 1. 53 : 53-4)

11-2. புறநா. 35 : 19 - 21, குறிப்புரை. “எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடை” (கலித். 9 : 1)

தலைவன்புகழ் குடையடுத்துவந்ததற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 31, ந.

(60)


1.புறநா. 20 : 8 - 9; “வருந்திய குடிமறைப் பதுவே” (புறநா. 35 : 19 - 20)

2. இறப்ப இழிந்த ஆனந்தவுவமையாவது உயர்ந்த பொருளுக்குத் தாழ்ந்த பொருளையுவமம் கூறுவது: ‘இறப்ப விழிந்தது மிறப்ப வுயர்ந்ததும், அறத்தகை வழீஇய வானந்த வுவமை’ என்பது விதி.

3. நிறைமதி தொழப்படாதென்றது, பிறை தொழப்படுமென்பது கருதி; இதனை, புறநா. 1 : 9 - 10, குறிப்புரையாலும், “வளையுடைத்தனைய தாகிப் பலர்தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறையே” (குறுந். 307) என்பதனாலும் அறிக.