29
அழல்புரிந்த வடர்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலநறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
5பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை
பாண்முற்றொழிந்த பின்றை மகளிர்
தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம், ஆங்க
முனிவின் முற்றத் தினிதுமுர சியம்பக்
கொடியோர்த்தெறுதலுஞ் செவ்வியோர்க்களித்தலும்
10ஒடியா முறையின் மடிவிலை யாகி
நல்லத னலனுந் தீயதன் றீமையும்
இல்லை யென்போர்க் கினனா கிலியர்
நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புநர்
ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு
15வெங்கட் டொலைச்சியு மமையார் தெங்கின்
இளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றன ருவக்குநின் படைகொண் மாக்கள்
பற்றா மாக்களிற் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்காற் பந்தர்ச்
20சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க்
குதவி யாற்று நண்பிற் பண்புடை
ஊழிற் றாகநின் செய்கை விழவிற்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய
25நகைப்புற னாகநின் சுற்றம்
இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே.

(பி - ம்.) 3 ‘பொலனறுந்’ 4 ‘மாறுமயிரிருந்தலை’ 14 ‘இழிமடல்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) எரியால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப்பூவுடனே ஐதாகத் தட்டிக் கம்பியாகச்செய்த நூலின்கண்ணேயிட்டு அலங்கரித்த தொழிலாற் பொலிந்த பொன்னானியன்ற நல்லமாலையைப் பாறிய மயிரையுடைய கரியதலை பொலிவுபெறச் சூடிப் பாண்சுற்றம் சூழ்வதாக, நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்; பாண்சுற்றம் சூழலொழிந்த பின்னர் நினது உரிமைமகளிருடைய தோள் சூழ்வதாக, நின் சாந்து புலர்ந்த மார்பம்; எப்போதும் வெறுப்பில்லாத அலங்காரத்தையுடைய கோயின் முற்றத்தின்கண்ணே இனிதாக முரசு ஒலிப்பத் தீயோரைத் தண்டஞ் செய்தலும் நடுவுநிலைமையுடையோர்க்கு அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையாற் சோம்புதலையுடையையல்லையாகி நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகாதொழிவாயாக; நெல்விளைந்த வயலிடத்துளதாகிய புள்ளை ஓட்டுவார் வீழ்ந்த பனங்கருக்காகின்ற விறகாற் கழிக்கண் மீனைச் சுட்டு அதனுடனே வெய்ய மதுவை உண்டு தொலைத்தும் அமையாராய்த் தெங்கினது இளநீரை உதிர்க்கும் செல்வமிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும் நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர் நின்னுடைய பகைவரைப்போல இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு கூவையிலையால் வேயப்பட்ட நான்குகாலையுடைய பந்தராகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி நின்பால் வருவார்க்கு உதவிசெய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய முறைமை யுடைத்தாக, நினது தொழில்; 1விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம்போல அடைவடைவே தோன்றி இயங்கி இறந்துபோகின்ற இவ்வுலகத்தின்கண் பொருந்திய மகிழ்ச்சியிடத்ததாக, நின்னுடைய கிளை; புகழிடத்ததாக, நீ பாதுகாத்த பொருள்-எ - று.

நின் நாண்மகிழிருக்கை பாண்முற்றுக; அதன்பின் அகலம் தோள் முற்றுக; நீ மடிவிலையாய் இனனாகாதொழிவாயாக; நின் பறறாமாக்களைப் போல முற்காலத்துச் சிறுமனை வாழும் வாழ்க்கையின் நீங்கி இப்பொழுது நன்னாடு பெற்று உவக்கும் நின் படைகொண்மாக்கள் வருநர்க்கு உதவியாற்றும் நண்போடுகூடிய பண்புடைத்தாகிய முறைமையையுடைத்தாக நின் செய்கை; நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருளெனக் கூட்டுக.

ஒரீஇ (20) என்பதனை ஒருவவெனத் திரிப்பினும் அமையும்.

நறுமை பொன்னிற்கு இன்றெனினும் தெரியற்கு அடையாய் நின்றது; நன்மையுமாம்.

ஆங்க : அசை.

நசைப்புறனாகவென்று உரைப்பாரும் உளர்.

இதனாற் சொல்லியது : படைகொள்மாக்களும் முறைமுதலாயின தப்பாமற் செய்து இன்புற்றிருக்கும்படி சிறப்புச்செய்யவேண்டுமென்பதாயிற்று.


(கு - ரை.) 1. புறநா.11 : 16.

2. ஐது-மெல்லிது; ஐ : பகுதி; “ஐதுவீ ழிகுபெயல்” (சிறுபாண்.13)

3. பொலமென்னுஞ் சொல் பிறகணத்து மகரங்கெட்டு முடிதலுக்கு மேற்கோள்; தொல்.புள்ளிமயங்கு. சூ. 61, ந.

5. நாண்மகிழிருக்கை-காலையில் யாவரும் தன்னைக் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருக்கை; இது நாளவையெனவும் கூறப்படும்; புறநா.54 : 3, 123 : 1.

1-5. புறநா.11 : 11 - 7, கு-ரை.319 : 14-5; 364 : 1 - 3; “எரியகைந் தன்ன வேடி றாமரை, சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி, நூலின் வலவா நுணங்கரின் மாலை, வாலொளி முத்தமொடு பாடினி யணிய” (பொருந.159-62, கு-ரை.)

11-2. இல்லையென்போர் - நாஸ்திகர்; இவ்வடிகளை, ‘சிறியவினமாவது நல்லத னலனுந் தீயதன் றீமையு மில்லென்போரும் .....உள்ளிட்ட குழு’ (குறள், 46-ஆம் அதிகார அவதாரிகை) என உரைநடையாக அமைத்தனர் பரிமேலழகர்; ‘அறிவாவது: நல்லதனலனுந் தீயதன் றீமையு முள்ளவாறுணர்தல்’ (தொல்.பொருளியல், சூ. 53, ந.)

15. புறநா.24 : 5.

19. கூவை - மஞ்சளைப்போல்வதொரு புதல்; இது தென்னாட்டுள்ள மலைப்பக்கங்களிற் காணப்படுகின்றது; “நூறொடு குழீஇயின கூவை” (மலைபடு.137); “பொலிகூவை” (மதுரைக்.142)

23-4. “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கு மதுவிளிந் தற்று” (குறள்,332) என்பது இவ்வடிகளுடன் ஒப்பிடற்பாலது.

22-4. விழாக்காலத்துக் கூத்தர்கள் வருதலும் அது முடிந்தபின்பு அவர்கள் வேறிடஞ் செல்லுதலும், “அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச், சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது, வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந.1 - 3) என்பதனாலும் அறியப்படும்.

‘இல்லையென்போர்க்கின னாகிலியர்’ என்பது முதலியவற்றால் அறனும், ‘படை கொள்மாக்கள்....நின் செய்கை’ என்பது முதலியவற்றால் பொருளும், ‘பாண்முற்றுக நின்னாண்மகிழ் இருக்கை’ என்பது முதலியவற்றால் இன்பமும் கூறப்பெற்றமையின், இதன் துறையும் முதுமொழிக்காஞ்சியாயிற்று.

(29)


1.ஆடுங் கூத்திய ரணியே போல , வேற்றோ ரணியொட "வந்தீரோவென" (மணி. 12:51:2); "ஆடுங் கூத்தர்போ லாருயி தொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது" (சிலப்.28: 165-6) என்பவை இங்கே கருதற்குரியன.