325
களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந் திறந்தெனக்
குழிகொள் சின்னீர் குராஅ லுண்டலிற்
சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ணூறல்
5முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொ லாடவர்
உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படலைச்
சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
10மறுகுடன் கமழு மதுகை மன்றத்
தலந்தலை யிரத்தி யலங்குபடு நீழற்
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை யிருக்கை யதுவே வென்வேல்
வேந்துதலை வரினுந் தாங்கும்
15தாங்கா வீகை நெடுந்தகை யூரே.

(பி - ம்.) 6 ‘முழவுமா தொலைச்சிய’7 ‘கொடுங்காழ’, ‘தொடுங்காழ’ 11 ‘யிலங்குபடு’13 ‘அருமுனை’

திணையும் துறையும் அவை.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.


(கு - ரை.) 1. நீறு - புழுதி; “நீறடங்குதெரு” (சிறுபாண். 201); “கரம்பைப் படுநீ றாடி” (பெரும்பாண்.93)

2. வம்பப்பெரும்பெயல் - புதிய மழை;“வம்ப மாரியைக் காரென மதித்தே” (குறுந். 66 :4). இறந்தென - போக.

3. குரால் - ஒருவகைப்பசு; கோட்டானுமாம்.

4. சேற்றைத் தோண்டுதலால் உண்டாகியகலங்கிய ஊறல்நீரை; “மணற்கிளைக்க நீரூறும்” (திருவள்ளுவமாலை,31)

5. “ஊண்முறை யூட்டும்” (புறநா.331 : 8)

6. முளவுமா - முள்ளம்பன்றியை; தொலைச்சிய- கொன்ற; “முளவுமா வல்சி” (ஐங்குறு. 364) ; “முளவுமாத்தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடு. 176)

4 - 6. “கல்லறுத் தியற்றிய வல்லுவர்க்கூவல், வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி” (புறநா.331 : 1 - 2)

7. உடும்பிழுது - உடும்பினது நிணத்தை.“உடும்பின் விழுக்கு நிணம்” (புறநா. 326 : 9 - 10).அறுத்த உடும்பிழுதையென்க. ஒடுங்காழ்ப்படலை -ஒடுமரத்தின் கழிகளாலாகிய கட்டுக்கதவு; படலுமாம்;ஒடு - ஒருவகை மரம்; “ஒடுமரக் கிளவி” (தொல்.உயிர். சூ. 60)

8. முன்றிலில். கூறுசெய்திடுமார் -பிறர்க்குப் பகுத்துக் கொடுப்பாராய்.

10. மன்றத்து - பொதுவிடத்துள்ள.

9 - 10. “நெய்ந்நறைக் கொளீஇய மங்குன்மாப்புகை, மறுகுடன் கமழும்.” (புறநா. 329 : 3 - 4)

11. அலந்தலை : “அலந்தலை மராமும்”(சிலப். 11 : 75). இரத்தி - இத்திமரம்; இலந்தையுமாம்.அலங்குதல் - அசைதல், நீழலில்.

10 - 11. “இரத்தி நீடிய வகன்றலை மன்றம்”(புறநா. 34 : 12)

12. வேட்டுவர் சிறாஅர் : புறநா.324 : 1 - 7.

13. மிளை - காவற்காடு; புறநா. 326: 7.

14. அரசன் தன்னிடத்தே வந்தாலும்தாங்குதற்குரிய.

14 - 5. “வரகுகட னிரக்கு நெடுந்தகை,அரசுவரிற் றாங்கும் வல்லாளன்னே” (புறநா. 327 :7 - 8)

ஊர் (15) இருக்கையது (13) (325)