203
கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளங் கரப்பினும்
எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை
இன்னுந் தம்மென வெம்மனோ ரிரப்பின்
5முன்னுங் கொண்டிரென நும்மனோர் மறுத்தல்
இன்னா தம்ம வியறே ரண்ணல்
இல்லது நிரப்ப லாற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையு மல்லை நீயே யொன்னார்
10ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்
பூண்கட னெந்தைநீ யிரவலர் புரவே.

(பி - ம்.) 2 ‘விளைந்தது நிலம்’ 3 - 4 ‘மில்வாழ்க்கையே யின்னுந்’ 7 ‘நிரப்பதாற்றாது’

திணையும் துறையும் அவை.

சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

(இ - ள்.) கழிந்தகாலம் பெய்தேனெனக் கருதி மழை பெய்யாது மாறினும் முற்காலத்து விளைந்தேனெனக் கருதி நிலம் விளைவை ஒழியினும் எல்லாவுயிர்கட்கும் உயிர்வாழ்க்கையில்லை; அதுபோல இன்னமும் எமக்குப் பரிசில் தாருமென்று சொல்லி எம்போல்வார் இரப்பின் அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது; கேளாய்: இயற்றப்பட்ட தேரையுடைய அண்ணலே! இல்லாத பொருளைத் தேடி நிரப்பமாட்டாத வறுவியோரினும், அவராற் பரிசில் நினைந்து வரப்படுவார் (வரப்படுவார்-கொடையாளர்) கொடாராயின் அவ் 1விரப்போரால் நச்சப்படும் இன்பத்தையிழப்பர்; தம் வறுமையாற் கொடுக்கமுடியாமையின் நாணி அவரெதிர்முகம் நோக்கமாட்டாது இன்பமிழக்கும் மாந்தர் தன்மையையு மல்லை நீ, 2இறந்துபடுவை; பகைவரது அரிய அரண் அவரிடத்ததாகவும் அதனை அழித்துக்கொள்ளுவதன் முன்னே நும்முடையதெனப்பாணர்க்குக் கடனாகக்கொடுக்கும் வென்றியோடுகூடிய வண்மையை யுடையோயாதலான் எம் இறைவ! நீ இரப்போரைப் பாதுகாத்தலை முறைமையாகப் பரிகரிப்பாயாக-எ - று.

அனையையுமல்லை யென்பதற்கு இரவலர் வேண்டுமளவும் பாணியாது (தாமதியாது) முன்னே அளித்தலின், நசையிழப்போர் தன்மையையுடையா யல்லை யென்றுமாம்.

எம்மனோரென்றது பிறரை நோக்கியன்றெனவுணர்க.

‘பொழிந்தென’, ‘விளைந்தென’ என்பனவற்றை வினையெச்சமாக்கி மாறினும் கரப்பினுமென்னும் வினையோடு முடிப்பினும் அமையும்.


(கு - ரை.) 1-2. ‘தகரவுகரம், கழிந்தது......கரப்பினும் என்னும் புறப்பாட்டினுள், பொழிந்து எனவும், விளைந்து எனவும் இறந்தகாலம் பற்றி வந்தமையின் ஏனையவற்றிற்குஞ் சிறுபான்மை இறந்தகாலமுமுண்டென அறிந்துகொள்க’, ‘கழிந்தது....கரப்பினும்: என்புழிப் பொழிந்தெனவும் விளைந்தெனவும் இறந்தகாலம் உணர்த்தின’ (தொல். வினை. சூ. 6, கல். ந.); ‘கழிந்தது.....கரப்பினும் : எனப் பொழிந்து விளைந்தென்னும் துவ்வீற்றுத் தன்மையொருமை வினைமுற்றுக்கள் இறந்தகாலமும் சிறுபான்மை காட்டுமெனவுங் கொள்க.’ (இ. வி.சூ. 50, உரை). கண்மாறல், ஒரு சொல்.

9-11. “பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, அரிய வென்னா தோம்பாது வீசி” (பதிற்.44); “அரிய வெல்லா மெளிதி னிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி” (மதுரைக். 145 - 6). ‘ஒன்னா, ராரெயிலவர்கட் டாகவு நுமதெனப் பாண்கடனிறுக்கும் வள்ளியோய்’ என்பதற்கு இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்கு அந்நகரைக் கொடுத்தது இங்கே உதாரணமாக அறியற்பாலது.

மு.‘கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான்போல் வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்தவெற்றியும்; தன்னையிகழ்ந்தோரையும், தான் இகழ்ந் தோரையும் கொள்ளாரென்ப....கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டினுள், ஒன்னார்....வள்ளியோய் என்பதுமது’ (தொல். புறத்திணை. சூ. 12, .)

(203)


1.“ஈத்துவக்கு மின்பம்” (குறள், 228)

2. “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை” (கலித். 43 : 26 - 7)