275
கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ விவற்கே செற்றிய
திணிநிலை யலறக் கூவை போழ்ந்துதன்
5வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி
ஓம்புமி னோம்புமி னிவணென வோம்பாது
தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக்
கன்றமர் கறவை மான
முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே.

(பி - ம்.) 4 ‘தினிநிலை மலரக்கூழை’ 5 ‘கழிமுகத்’ 9 ‘சமத் தொழிந்ததன்’

திணையும் துறையும் அவை.

ஒரூஉத்தனார்.


(கு - ரை.) 1. "கோட்டங்காழ்கோட்டி னெடுத்துக்கொண்டாட்டிய”(கலித்.107: 7)

‘கோட்டுப்பூ’ என்பதற்கு, கோடுதலைச்செய்யும் மாலையென்று பொருள்கூறி, இவ்வடியை மேற்கோள்காட்டினர் பரிமேலழகர்; குறள், 1313.

3. ‘ஒத்தன்று’ என்பதைக் கோட்டங்கண்ணிமுதலிய மூன்றனோடும் தனித்தனியே கூட்டுக.

4. திணிநிலை - நெருங்கியிருந்த சேனையின்நிலை.

5. புறநா. 282: 1. எஃகம் - வாள்; முல்லை.68, ந.

7. தொடர் - சங்கிலி. தட்ப - தடுக்க;“புள்ளிடை தட்ப” (புறநா. 124). வீரனுக்குயானை: பெருங். 1. 46: 53 - 4.

8. “கற்றாவின் மனம்போலக் கசிந்துருகவேண்டுவனே” (திருவாசகம், திருப்புலம்பல், 3);“ஈற்றா விருப்பிற் போற்றுபு நோக்கி” (பொருந.151); “தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும்,ஆபோற் படர்தக நாம்”, “கன்றுசேர்ந் தார்கட்கதவீற்றாச் சென்றாங்கு” (கலித். 81: 37, 116:8)

9. எதிர்ந்த தோழற்கு - பகைவரைஎதிர்த்த நண்பனைக் காத்தற்கு. இது பாரதப்போரில்அபிமன்னுவைப் பாதுகாத்தற்குச் சென்ற வீமன் செய்தியைநினைப்பிக்கின்றது.

8 - 9. “கன்றுசேர்ந் தார்கட்கதவீற்றாச் சென்றாங்கு, வன் கண்ணளாய்வரலோம்பு” (கலித். 116)

விரைவென்னும் மெய்ப்பாட்டிற்குமேற்கோள்; தொல். மெய்ப்பாடு. சூ. 12, இளம்.

மு. தும்பைத்திணைத்துறைகளுள்,‘ஒருவனொருவனை யுடைபடை புக்குக் கூழைதாங்கியவெருமை’ என்பதற்கு மேற்கோள் (தொல்.புறத்திணை. சூ. 14, இளம்.); இதனைத் தானைநிலைக்குமேற்கோள் காட்டி, ‘இஃது உதவியது’ என்பர்; தொல்.புறத்திணை. சூ. 17, ந.

(275)