100
கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு
5வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே யன்னோ
உய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே
10செறுவர் நோக்கிய கண்டன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே.

திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - வாகை; துறை - அரசவாகை)

அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

(இ - ள்.) கையின்கண்ணது வேலே; காலின்கண்ண அணிந்த வீரக்கழல்; உடம்பின்கண்ணது வேர்ப்பு; மிடற்றின்கண்ணது ஈரம்புலராத பசிய புண்; பகைவர் தொலைதற்கு ஏதுவாகிய வளரும் இளைய பனையினது உச்சிக்கண்ணே வாங்கிக்கொள்ளப்பட்ட ஊசித்தன்மையைப் பொருந்திய வெளியதோட்டையும் வெட்சியினது பெரிய மலரையும் வேங்கைப்பூவுடனே விரவிச் சுருண்ட கரியமயிர் பொலிவுபெறச் சூடிப் புலியொடு பொருத வலிய யானையையொப்ப இன்னமும் நீங்காது, சினம்; ஆதலால், ஐயோ! பிழைத்தாரல்லர், இவனைச்சினப்பித்தவர்கள்; பகைவரை; வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய புதல்வனைப் பார்த்தும் சிவப்பமையாவாயின-எ - று.

காலனபுனை கழலென்பது வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்தோறும் வென்றுகட்டினவெனவுமாம்.

உம்மை : சிறப்பு

தோட்டையும் மலரையும் வேங்கையொடு விரைஇச் சூடிச்செறுவர் நோக்கிய கண் சிறுவனைநோக்கியும் சிவப்பானா; ஆதலால், அன்னோ! இவனுடற்றியோர் உய்ந்தனரல்லரெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

வட்காரென்பது வட்கரெனக்குறுகிநின்றது : வட்கர் - குற்ற மெனினும் அமையும்.


(கு - ரை.) 1. கழல் : "ஆடவர் கொடைவீ ரத்தா லணிவது கழ லென்றாமே" (சூடாமணி. 7 : 26)

காலன புனைகழல்: "வில்லோன் காலன கழலே" (குறுந். 7)

2. மிக்க கோபமுற்றோர்க்கு உடம்பில் வேர்வை தோன்றுதல் இயல்பு: "வெயர்பொடிப்பச் சினங்கடைஇ" (பு - வெ. 139). உடம்பு முழுதும் புண்படப் போர்செய்தல் வீரர்க்கு இயல்பாதலின், இவனுக்கு மிடற்றுப்புண் கூறப்பட்டது; புறநா. 180 : 5 - 6; "விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள், வைக்குந்தன் னாளை யெடுத்து" (குறள், 776), "சீறுஞ் செருவிற் றிருமாற்பிற் றொண்ணூறும், ஆறும் படுதழும்பி னாகத்தோன்" (குலோத்துங்கசோழனுலா) என்பவற்றிலும் இங்ஙனம் கூறப்பட்டிருத்தல் காண்க.

3-4. வட்கர் - பகைவர். "வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டி.......வஞ்சிசூடுதும்" (சிலப். 25 : 146 - 9)

6. மு. பொருந. 160. 5-6. புறநா. 265 : 2 - 4.

7 - 8. "கதழ் வாய் வேழம், இருங்கேழ் வயப்புலி வெரீஇ யயலது' கருங்கால் வேங்கை யூறுபட மறலிப், பெருஞ்சினந் தணியுங் குன்றநாட", "வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை, கன்முகைச் சிலம்பிற் குழுமும்" (நற். 217 : 2 - 5, 255); "கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு, நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை" (கலித். 49 : 1 - 2); "புலியொடு பொருது சினஞ்சிறந்து வலியோ, டுரவுக்களி றொதுங்கிய மருங்கு", "குயவரி யிரும்போத்துப் பொருத புண்கூர்ந், துயங்குபிடி தழீஇய மதனழி யானை" (அகநா. 291, 398); "குரூஉப்புலி பொருத புண்கூர் யானை" (மலைபடு. 517); சிலப். 25 : 29.

"வரிவயம் பொருத.........சினனே : என்பதனுள் அலைபற்றிச் சினம் பிறந்தது; என்னை? புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப்புண்டலை நினைந்து சினங்கொள்ளாநின்றதென்றமையின்' (தொல். மெய்ப். சூ. 10, பேர்); இ - வி. சூ. 578, மேற்.

9. புறநா. 61 : 16 - 7.

10. புதல்வன் பிறந்தவுடன் அவன் முகத்தைத் தந்தை பார்த்து மகிழவேண்டுமென்பது தருமநூல் விதி; இதனை, 'சிறப்பாவன பிறந்த புதல்வன் முகங்காண்டலும்' (தொல். கற்பு. சூ. 5, ந.), "மாமுனி தன்னொடு மன்னர் மன்னவ, னேமுறப் புனல்படீஇ வித்தொ டின்பொருள், தாமுற வழங்கிவெண் சங்க மார்ப்புறக், கோமகார் திருமுகங் குறுகி நோக்கினான்" (கம்ப. திருவவதார. 112) என்பவற்றாலும் அறிக.

தலைவனது இயல்பைக் கூறினமையால், இதுவும் அரசவாகையாயிற்று.

(100)