(பி - ம்.) 2 ‘பன்னாள்’ 3 ‘தலைநாள் விருப்பினன்ன பேணலன்’ 10 ‘வாழ்கவவன்’ திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) யாம் ஒருநாட்செல்லேம்; இரண்டுநாட்செல்லேம்; பல நாளும் பயின்று பலரோடுகூடச்செல்லினும் முதற்சென்றநாள்போன்ற விருப்பத்தையுடையன், அணிகலம் அணிந்த யானையையும் இயன்ற தேரையுமுடைய அதியமான்; பரிசில்பெறுங்காலை நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும், யானை தனது கொம்பினதிடையே வைக்கப்பட்ட கவளம் போல நமது கையகத்தது, அப்பரிசில்; அது தப்பாது; உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே! நீ பரிசிற்கு வருந்தவேண்டா; அவன்தாள் வாழ்வதாக-எ - று. அதியமான்விருப்பினனென முன்னே கூட்டுக. கோட்டிடைவைத்த கவளம்போலவென்றதற்கு யானைவாயிற் கொண்டு நுகரும் அளவும் கோட்டிடைவைத்த கவளம் போலப் பரிசில் கையகத்தது வென்க; அன்றிக் களிறுகோட்டிடைவைத்த கவளத்தைச் சிறிது தாழ்த்ததாயினும் அஃது அதற்குத் தப்பாதவாறுபோலப் பரிசில் சிறிது தாழ்ப்பினும் நமக்குத் தருதல் தப்பாதென்பதாக்கி உரைப்பினும் அமையும். தாளை முயற்சியென்பாரும் உளர். அருந்தவென்பது அருந்தெனக் கடைக்குறைக்கப்பட்டது; அருந்தென முன்னிலையேவலாக்கி உரைப்பினும் அமையும். |
(கு - ரை.) 1. செல்லலமிரண்டையும் எச்சமாக்கினும் பொருந்தும். 1 - 2. "பன்னா ணிற்பினுஞ் சேர்ந்தனிர் செலினும்" (மலைபடு. 452); "ஒருநாள் வாரல னிருநாள் வாரலன், பன்னாள் வந்து" (குறுந். 176 : 1 - 2) 1 - 3. புறநா. 58 : 28, குறிப்புரையும், "தலைநா ளன்ன பேணலன்" (நற். 332), "பெருவரை யடுக்கத்துக் கிழவ னென்றும், அன்றை யன்ன நட்பினன்" (குறுந். 385), "தண்டாக் காதலுந் தலை நாட் போன்மே" (அகநா. 332), "அன்றை யன்ன விருப்பொடு" (குறிஞ்சிப். 238), "தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து, பலநாள் நிற்பினும்" (மலைபடு. 565 - 6), "பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை, யென்னானும் வேண்டுப வென்றிகழ்ப - வென்னானும், வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர், காண்டொறுஞ் செய்வர் சிறப்பு" (நாலடி. 159), "தலைநாள் விழைவொடு" (வி. பா. குருகுல. 79) என்பனவும் ஈண்டு அறியற்பாலன. 4. அணிபூ ணணிந்த யானை : புறநா. 151 : 3 - 4, 153 : 2. 6 - 7. "தேம்படு கவுள சிறுகண் யானை, ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த, வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத், தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டென" (முல்லைப். 31 - 4) 9. ஏமாந்த - ஆசைப்பட்ட; புறநா. 198 : 8; பொருந. 98; "இரப்போர்க் காணா தேமாந் திருப்ப" (மணி. 14 : 50) 10. தாள்வாழ்கவென்றல் மரபு: புறநா. 70 : 19, 103 : 12, 171 : 15. (101)
|