102
எருதே யிளைய நுகமுண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவலிழியினு மிசையேறினும்
அவண தறியுநர் யாரென வுமணர்
5கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாணிறை மதியத் தனையையிருள்
யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே.

திணை - அது; துறை - இயன்மொழி.

அவன்மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

(இ - ள்.) எருதுகள் இளையதாம் நுகம்பூண்டலை யறியா (பி - ம். மதியா); சகடந்தான் பண்டம் பெரிதாக இடப்பட்டது; ஆதலால், அது பள்ளத்தே இழியினும் மேட்டிலே ஏறினும் அவ்விடத்து வரும் இடையூறு அறிவார் யார்தானென்று நினைந்து உப்புவாணிகர் அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட சேமவச்சுப்போன்ற புகழ்விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தோர்! நீ திங்களாகிய நாள்நிறைந்த மதியத்தை யொப்பை; ஆதலின், நின்நிழற்கண் வாழுமவர்கட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது ?-எ - று.

திங்கள் நாணிறைமதியத்தனையையென்றது, 1அறிவும் நிறைவும் அருளும் முதலாகிய குணங்களால் அமைந்தாயென்றவாறாம்.

சேமவச்சன்னவென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சுமுறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறு உற்றால் அதுநீக்கிக் காத்தற்குரியை யென்பதாம்.

'எருதே யிளைய நுகமுண ராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே' என்பது 2உவமங்கருதாது சகடத்திற்குவரும் ஏதங்குறித்து உமணர் சேமவச்சு யாத்தற்குக்காரணமாய் நின்றது.


(கு - ரை.) 2. பின்பு உமணர் என்றதனால், பண்டமென்பது உப்பைக் குறிக்கும்.

5. "கீழ்மரத் தியாத்த சேமவச்சன்னவென்றாற் போலும் உவமப்பொருள் இக்காலத்திற்கு ஆகாதாயிற்று (தொல். செய். சூ. 80, ந.)

சேமவச்சு - காவலாகிய அச்சு.

6. கவிகை : புறநா. 54 : 7, குறிப்புரையும், "தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை" (மலைபடு. 399) என்பதன் பொருளையும் பார்க்க.

6 - 7. "பன்மீ னாப்பட் டிங்கள் போலப், பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை" (பதிற். 90); "பன்மீ னடுவட் பான்மதி போல, இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி" (சிறுபாண். 219 - 20); "பன்மீ னடுவட் டிங்கள் போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்து" (மதுரைக். 769 - 70); "பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற், கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்றமொத்தே" சீவக. 882.

(102)


1. முருகு. 98; மதுரைக். 769, ந.

2."உவமப் பொருளி னுற்ற துணரும், தெளிமருங் கிலவே திறத்தியலான" (தொல். உவம. சூ. 20) என்பதையும், "இனி, உவமத்தின் உற்றது உணர்க வென்னாது 'பொருள்' என்றதனாற் பொருட்கு அடுத்த அடையும் உவம அடைக்கேற்றது உணரப்படாதன களையப்படுமென்பது. அது, 'பாசடை நிவந்த கணைக்கா னெய்தல், இனமீ னிருங்கழியோத மல்குதொறும், கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்' (குறுந். 9) என்றவழி, பாசடை நிவந்த, கணைக்காலென நெய்தலாகிய பொருட்குவந்த அடை யிரண்டும் கண்ணெனப்பட்ட உவமத்திற்கு ஏற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலவென்று களைந்து கொள்க" என்னும் பேராசிரியர் உரையையும் பார்க்க.