(பி - ம்.) 10 - 11 ‘பரிப்ப, வறத்தற்காலை’ திணை - அது; துறை - விறலியாற்றுப்படை. அதியமான் நெடுமானஞ்சியை அவர் பாடியது. (இ - ள்.) காவினது ஒருதலைக்கண்ணே பதலை தூங்க ஒருதலைக் கண்ணே துளையை அகத்தேயுடைய சிறிய முழாவைத் தூங்கும்பரிசு தூக்கி இடுவோரின்மையின் 1ஏலாது கவிழ்ந்த என்மண்டையை இட்டு மலர்த்தவல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடத்தேயிருந்த சிலவாகிய வளையையுடைய விறலி! நீ அவன்பாற்போவையாயின் அவன் சேய்மைக் கண்ணானல்லன்; முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த இருட்சியையுடைய கரிய புகை மலையைச்சூழும் முகில்போல இளங்களிற்றைச் சூழும் பகைவர்தேயத்திருந்தான், பல வேற்படையையுடைய அதியமான்; ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத மண்டை மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக உலகம் வறுமையுறுதலையுடைய காலமாயினும் பாதுகாத்தலை வல்லன்; அவன்றாள் வாழ்க-எ - று. பதலையென்பது ஒருதலைமுகமுடையதொரு தோற்கருவி. பகைப்புலத்தோனென்ற கருத்து : 2பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டியவெல்லாந் தருதல் அவனுக்கு எளி தென்பதாம். உம்மை : சிறப்பு. சேணோனல்லனென்பதற்குப் பரிசில் நீட்டிப்பானல்லனென்று உரைப்பினும் அமையும். |
(கு - ரை.) 1. தூங்க - தொங்க. 1-2. புறநா. 139 : 1, 152 : 14 - 8; "நரம்பின் றீந்தொடை பழுனிய, வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப், பண்ணமை முழவும் பதலையும் பிறவும், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர்" (பதிற். 41 : 1 - 5); "திண்வார் விசித்த முழவொ டாகுளி, நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப்பாண்டில், மின்னிரும் பீலி யணிதழைக் கோட்டொடு,...... நொடிதரு பாணிய பதலையும் ...... நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்" (மலைபடு. 3 - 13) 3. மண்டை - ஒருவகை உண்கலம்; வாணாய்; புறநா. 115 : 2, 125 : 3, 179 : 2 - 3; "பிழற்பெய் மண்டை" (மணி. 6 : 92) 4. சில்வளைவிறலி : புறநா. 60 : 5, குறிப்புரை. 6. புறநா. 6 : 22, 23 : 9 - 10, 57 - 7. 10, "நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை" (மதுரைக். 624); "தேனி றாலன தீஞ்சுவை யின்னடை; (சீவக. 2674) 9 - 10. புறநா. 125 : 1 - 3, 386 : 5. 12. புறநா. 70 : 19, 101 : 10, குறிப்புரை. (103)
1. புறநா. 179 : 2 - 3. 2. புறநா. 22 : 26 - 8.
|