140
தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாஞ்சில
5அரிசி வேண்டினெ மாகத் தான் பிற
வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
10போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே.

(பி - ம்.) 3 ‘படப்பை கொய்த’ 4 ‘கையுறையாக’ 5 ‘பிறர்’ 8 ‘இன்னதேற்றா’ 9 ‘முண்டு கொல்’ 10 ‘போற்றா தம்ம’

திணை - அது; துறை - பரிசில்விடை.

அவனை ஒளவையார் (பி - ம். அவர்) பாடியது.

(இ - ள்.) பெரிய நிலைமையையுடைய பலாமரத்தையுடைத்தாய நாஞ்சின்மலைக்கு வேந்தன், அறிவுமெல்லியன், நிச்சயமாக' 1செவ்விய நாவையுடைய புலவீர்! வளையணிந்த கையையுடைய விறலியர் மனைப் பக்கத்தின்கட் பறித்த இலைக்குமேல் தூவுவதாக யாங்கள் சில அரிசி வேண்டினேமாக, தான் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிதலால் எம் வறுமையைப் பார்த்தலேயன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கிப் பெரிய சுரஞ்சூழ்ந்த மலைபோல்வதொரு பெரிய யானையை அளித்தான்; ஆதலான், ஒருவற்கு ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப்பட்டதொரு தெளியாக்கொடையும் உளதோ தான்? பெரியோர் தாங்கள் செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்?-எ - று.

பிறவென்பது அசைநிலை.

கொல்லென்பது பின்பும் கூட்டியுரைக்கப்பட்டது.


(கு - ரை.) 1. புறநா.139 : 8, 380 : 9.

அகரவீற்று உரிச்சொல் தடவுநிலையென உகரம் பெற்றுவந்ததற்கு மேற்கோள்;தொல்.குற்றியலுகரப். சூ. 78, ந.

2. செந்நாப்புலவீர்: புறநா.107 : 2; "செந்நாப் புலவனியான் செல்கின்றேன்" (தனிப்பாடல்)

4. கண்ணுறை - மேலீடு; புறநா.61 : 5.

5-6. 'பிற' என்னும் இடைச்சொல் அசைநிலையாக வந்ததற்கு மேற்கோள்; தொல்.இடை. சூ. 31, சே; தெய்வச்; ந; இ. வி.சூ. 277, உரை.

5 - 8. புறநா.136 : 20 - 23; "சிரப்பான் மணிமவுலிச் சேரலர் கோன் றன்னைச், சுரப்பா டியான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான், இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்" (தமிழ்நாவலர்சரிதை, 24)

9. தேற்றா என்பது தன்வினைப்பொருளில் வந்தது.

மு. புறநா.394 : "சேற்றுக் கமலவயற் றென்னாறை வாணனையான், சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக், களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன், அளிக்குமா றெவ்வா றவன்" (தனிப்பாடல்)

பாடாண்டிணைத்துறைகளுள், கொடுப்போரேத்தற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 29, இளம்; சூ. 35, ந.

(140)


1 'பொய் கூறாமையிற் செந்நாவென்றார்' என்பர் பின்; புறநா. 148, உரை.