187
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

திணையும் துறையும் அவை.

ஒளவையார் பாடியது.

(இ - ள்.) நிலனே! நீ ஒன்றில்நாடேயாக; ஒன்றிற் காடேயாக; ஒன்றிற் பள்ளமேயாக;ஒன்றின் மேடேயாக; எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர்ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கெனஒரு நலமுடையையல்லை வாழி !-எ - று.

தீயநிலனேயாயினும் நல்லோருறையின்நன்றெனவும் நல்ல நிலனே யாயினும் தீயோருறையின்தீதெனவும், தன்னிடத்து வாழ்வோரியல்பல்லது தனக்கெனஓரியல்புடையதன்றென நிலத்தை இழித்துக் கூறுவதுபோலஉலகத்தியற்கை கூறியவாறாயிற்று.

1 ஒன்றோவென்பது, எண்ணிடைச்சொல்.


(கு - ரை.) 1. நாடாகொன்றோகாடாகொன்றோ வென்பனவற்றையும் நாடேயாக காடேயாகஎன இதன்பாற்படுத்துக; இவற்றுள் ஏவல் கண்ணாததுஇதுவெனவுணர்க’ (தொல். வினை. சூ. 29, ந.)

3 - 4. “காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லனல்லனேல், மீக்கூறு மன்ன னிலம்” (குறள், 386)

(187)


1 புறநா. 32 : 2, 71 : 16.